தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று காலை சுமார் 6 மணி அளவில் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ரமேஷ் ப்ளவர்ஸ் என்ற உலர்பூக்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை தொழிற்சாலைக்கு அழைத்து வர நிறுவனம் சார்பில் கிராமம் கிராமாக சென்று வேன் மூலம் தொழிலாளிகளை பணிக்கு அழைத்து வருவது வழக்கம்.


                                 

                                                                                                    

                                                                 

அதன்படி இன்று  ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வேலைக்கு தொழிலாளிகளை  ஏற்றி வந்த  வேனும், தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி சென்ற தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி செல்வராணி (45), ரவீந்திரன் மனைவி காமாட்சி (எ) ஜோதி (40), முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா (48) மற்றும் நடுவக்குறிச்சி காலனியை சேர்ந்த அடைக்கலாஜ் மகள் மணிமேகலை (20) ஆகிய 4 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.


                                   

                                                               

இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு தூத்துகுடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 10 பேரையும் காப்பாற்றி அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
                               

 

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார், தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுனரான புதியம்புத்தூர் நயினார்புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பண்டாரம் (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.