இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை தமிழர்கள் மீண்டும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை இரண்டு குழந்தைகளுடன்  இலங்கை தமிழர்கள் ஒரு குடும்பத்தினர்  ஆபத்தான முறையில்  கடல் வழிப்பயணம் செய்து  அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இதே போன்று நேற்று இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தோணி மூலம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வர முயன்ற 12 பேரை அங்கு இலங்கை கடற்படையினர் பிடித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று இரவு  இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் இலங்கையில் தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளனர்.




அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வரவும். மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும்  இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ போலீசார் அழைத்து வந்தனர்.இலங்கையில் இருந்து ஏற்கனவே 2 குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்தநிலையில், மேலும் இன்று  நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். 


அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கை  நாட்டின் பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் இலங்கை மன்னார் மாவட்டம் முத்தரமித்தரை பகுதியிலிருந்து  ஒரு பைபர் படகில்,கிஷாந்தன்(34) ரஞ்சிதா(29),ஜெனீஸ்டிக்கா(10),ஆகாஸ்(2)  உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தனூஷ்கோடி அரிசல் முனை மணல்திட்டில் இலங்கை யிலிருந்து  பைபர் படகில் அதிகாலை 2 மணியளவில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்றனர்.




இதனையடுத்து தகவலறிந்த மெரைன்  போலீசார் அவர்களை மீட்டு தற்போது காவல் நிலையத்தில் அழைத்து வந்தனர். இவர்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கையில் குழந்தைகள் முதியவர்கள் வாழவே முடியாத ஒரு ஆபத்தான நெருக்கடி நிலை உருவாகி உள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமலும் குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியாமல் அவதியுற்று வருவதாகவும் தமிழகத்தில் குறிப்பாக தனூஷ்கோடிக்கு வருவதற்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள்  முயற்சித்து வருவதாகவும் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு,காரணமாக  வர முடியவில்லை எனவும் இந்திய அரசு இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவர்களிடம்  தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின் மண்டபம்  இலங்கை முகாமில் தங்க வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அகதியாக வந்தது குறித்து இலங்கைப் பெண் ரஞ்சிதா கூறுகையில்: இலங்கையில் கடல்தொழில் செய்துவருகிறோம். தற்போது கடலுக்கு போகமுடியாது காரணம் மண்ணெண்ணைத் தட்டுப்பாடு. எந்தத்தொழிலும் செய்ய முடியாது  கொத்தனார் வேலைக்குச் சென்றால் சிமெண்ட் கிடையாது. தச்சு வேலைக்குச்சென்றால் கரண்ட் இல்லை. வருமானம் தரக்கூடிய எந்தத்தொழிலும் இல்லாததால் வருவாய் இன்றி பொருட்கள் வாங்க முடியவில்லை.  பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும். பணமிருந்தாலும் பொருட்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.  கேஸ் இல்லை, மணிக்கணக்கில் கரண்ட் இல்லை,  நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, பள்ளிகளும் பாதிநாள் இயங்குவதும் இல்லை.  சமாளிக்க முடியவில்லை. இதற்கு மேல் அங்கே இருக்க முடியாது. இப்படி நிறைய மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இனி ஒன்றும் செய்யமுடியாத சூழ்நிலையில்தான் அங்கிருந்து வெளியேறினோம். போனால் கடலோடு போவோம்.  இல்லை தப்பிப் போனால் இந்தியா போய் சேர்வோம் என்ற நிலையில்தான் வந்துசேர்ந்தோம். என்று கூறினார்.





இதுகுறித்து நிஷாந்த் கூறுகையில்: இலங்கையில்  நிலைமை மிகவும் மோசம்.  இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவுகள் தான் அதிகரிக்கும்.  பால்மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை,  எந்த ஒரு தொழிலுக்கும் போக இயலாது.  வாழ வழியில்லாமல்தான் நாங்கள் இங்கு வந்தோம் இதே போல நிறைய பேர் வருவதற்கு காத்திருக்கின்றனர். விரைவில் 30 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் இங்கு வருவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மண்ணெண்ணை வரும் அதுவும் பத்து லிட்டர் மட்டுமே கொடுப்பார்கள்,  அதையும் உறுதி சொல்ல முடியாது. வசதியாகஇருப்பவர்கள் கூடுதலாக மண்ணெண்ணை வாங்கி தொழில் செய்வார்கள்.  எப்படி தொழில் செய்தாலும் விலைவாசிகள் எல்லாம் அதிகரித்துள்ளது. தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்  அங்கு வாழ முடியாது என்பதால் இங்கு அகதிகளாக வந்தோம்.2006  யுத்த காலத்தில் இங்கு வந்து தங்கியிருந்தோம்.  சமாதானம் ஏற்பட்ட பிறகு 2010 ஆம் ஆண்டுதான் திரும்பிச் சென்றோம். என்று கூறினார்.