கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் கஞ்சா வியாபாரம் செய்ய வந்த புதுக்கோட்டை வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலையம் ரயில் நிலையம் கல்வி நிலையங்கள் என பல்வேறு இடங்களில் சர்வ சாதரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் மூலமாகவும் கஞ்சா விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் அவர்களை பிடிப்பதில் திணறி வருகின்றனர். அண்மையில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்திய தகவல் கிடைத்தது. அங்கு சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 



 

அந்தவகையில், கோயம்புத்தூரில் இருந்து அரசு பேருந்தில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திற்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒருவர் நான்கு கிலோ கஞ்சாவுடன் வந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வடசேரி பேருந்து நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பந்தப்பட்ட அரசு பேருந்து வந்த போது சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில் பேருந்தில் இருந்து இறங்கிய வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா வாங்குவதற்காக வந்த நபர்களை பிடிக்க பேருந்து நிலையத்தில் போலீசார் தயாராக இருந்தனர் . அப்போது மணிகண்டனிடம் கஞ்சா விலைக்கு வாங்க வந்த 2 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த அரவிந்த் , வடசேரி அருகே அருகுவிளையை சேர்ந்த பாபு ஆகிய இருவர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் பல நாட்களாக பேருந்து மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் மடக்கி பிடித்த நிலையில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.