தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இளஞ்சிறார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 




தூத்துக்குடி சாந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பரநகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுக்கும் பட்டறையும் வைத்து உள்ளார். நேற்று இரவு முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்கு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3கிலோ வெள்ளிப்பொருட்கள், 2½ பவுன் ஐம்பொன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.



 


அதே நேரத்தில் லாக்கரில் இருந்த சுமார் 15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய சந்து பகுதியில் இருந்து கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் வகையில் துளையிடப்பட்டு இருந்தது. அந்த வழியாக கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.




இதைத்தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுண் டிஎஸ்பி (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடினர். சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.




விசாரணையில் தூத்துக்குடி  முனியசாமிபுரம் தொடர்ச்சி,  லோகியா நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி என்ற குட்டி , பிரையண்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் சதீஷ் என்ற மோகன் , லெவிஞ்சிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் சுடலையாண்டி , இளஞ்சிறார் உட்பட உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். நகை கடையில் வெள்ளி பொருட்களை திருடிய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் புகார் அளித்த 4 மணி நேரத்தில் கைது செய்து திருடுபோன வெள்ளி பொருட்களை மீட்ட தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்