திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்க பட்ட 367வது ஆண்டுவிழா- உற்சவர் அலைவாயுகந்த பெருமான் சிறப்பு அபிஷேக தீபாரதனையுடன் திருவீதி உலா.




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை 1648 ஆம் ஆண்டு டச்சுப்படையினர் கைப்பற்றினர். இதனை மன்னர் திருமலை நாயக்கர் எதிர்த்து போராடியும் வெற்றி காண இயலவில்லை.




இதனை தொடர்ந்து கோவிலை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் சண்முகர், நடராஜர் இரு உற்சவ மூர்த்திகளையும் எடுத்து கொண்டு மீண்டும் கடல் வழியே பயணத்தை தொடர்ந்தனர்.  கடலிலேயே உற்சவ மூர்த்தி சிலைகளை உருக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்,கடும் சூறாவளியால் கப்பல் நிலை தடுமாறியது. இதனை கண்டு அஞ்சிய டச்சுக்காரர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து இரண்டு உற்சவ மூர்த்தி சிலைகளையும் கடலில் விட்டதும் கடலின் சீற்றமும் காற்றின் வேகமும் தணிந்தது. இதனை கண்டு வியப்புற்றனர் டச்சுக்காரர்கள். டச்சு நாட்டின் ராணுவ குறிப்பில் வரலாற்று ஆவணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடைபெற்று 5 ஆண்டு கடந்த பின்னர் உற்சவ மூர்த்தியை மீண்டும் உருவாக்கும் பணி கோயிலில் துவங்கப்பட்டது. அச்சமயத்தில் வடமைலயப்பர் என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உற்சவ மூர்த்தி கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து அடையாளமாக எலுமிச்சை பழமும், கருடப்பறவையும் தோன்றும் என அருளினார். இதனை தொடர்ந்து வடமலையப்பர் கடலில் தேடத்துவங்கினார். குறிப்பிட்ட தூரத்தில் கருடன் வட்டமிடுவதை கண்ட வடமலையப்பர் வேகமாக சென்று பார்த்தபோது எலுமிச்சை பழம் மிதந்ததை கண்டவுடன் கடலுக்குள் நீந்தி சென்று உற்சவ மூர்த்திகளை வெளியே கொண்டு வந்து திருச்செந்தூர் கோயிலில் சண்முகரையும் நடராஜரையும் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.




முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக புகழ் பெற்றது.இக்கோயிலின்  சண்முகர் கடலில் கண்டெடுக்கபட்ட நாளான தை மாதம்  4 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகின்றது.இதனையொட்டி   சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 367  வது ஆண்டான இன்று    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து,  உற்சவரான அலைவாயுகந்த பெருமானுக்கு கோவில் உட்பிராகரத்திலுள்ள சஷ்டி மண்டபத்தின் முன்பு 16 வகையான பால், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு, அலங்காரமாகி மஹா தீபாராதனையுடன் எழுந்தருளி, கோவிலுள்ள உட்பிராகரம் மற்றும் வெளிபிராகத்தை சுற்றி  திருவீதி உலா வந்து மீண்டும்  சஷ்டி மண்டபத்தை வந்தடைந்தார்.


கோரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி, பக்தர்களின் வருகை மறுக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தாண்டு இந்நிகழ்வு பக்தர்கள் வருகையின்றி நடைபெற்றது.