இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் என தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்திமண்டபம், தேசிய கொடி வண்ணத்தில் அலங்கார மின் விளக்குகளால் அலங்கிக்கப்பட்டுள்ளது. காவி, வெள்ளை, பச்சை நிற மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி மண்டபத்தை கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். குடும்பத்துடன் மண்டபம் அருகே நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

 



 

சுதந்திர தினத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வாடிக்கை. அதன் அடிப்படையில் ரயில்நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 



 

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். இதே போல் மாவட்டத்தில் அதிக மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களுக்கு தான் சுதந்திர கொடியை சுமப்பதற்கும் மக்களுக்கு காட்டுவதற்கும் அதிகாரம் உண்டு - குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேச்சு!

 


 

காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களுக்கு தான் சுதந்திர கொடியை சுமப்பதற்கும் மக்களுக்கு காட்டுவதற்கும் அதிகாரம் உண்டு. சுதந்திரக் கொடியை பிஜேபி காரர்கள் கையில் வைத்தால் வாங்கி பறிக்க வேண்டும் என்றும்; சுதந்திர கொடியை பிஜேபி காரர்கள் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அஞ்சுகிராமத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நடைபயண பேரணியில் பேசியுள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களுக்கு தான் சுதந்திர கொடியை சுமப்பதற்கும் மக்களுக்கு காட்டுவதற்கும் அதிகாரம் உண்டு என்றும் சுதந்திரக் கொடியை பிஜேபி காரர்கள் கையில் வைத்தால் அதனை வாங்கி பறிக்க வேண்டும் என்றும் சுதந்திர கொடியை பிஜேபி காரர்கள் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இன்னும் கொஞ்ச நாள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்தால் இந்திய தேசத்தின் வரலாறையும் கூட மாற்றிவிடுவார் எனவும் பேரணியில் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சு கிராமம் முதல் அழகப்பபுரம் வரை தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.