தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் தோணுகால் வருவாய் கிராமத்தில் இருந்து முடுக்குமீண்டான்பட்டி கிராமம் வரை மொட்டைமலை அடிவாரத்தில் மிகப்பழமையான விமான ஓடுதளம் உள்ளது. இந்த விமான ஓடுதளத்தை சீரமைத்து விமான பயிற்சி மையம் உருவாக்கப்படும் என ஆங்கில நாளிதழுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இந்த விமான ஓடுதளம் கவனம் பெற்றுள்ளது.
கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலை நிர்வாகம், அதன் கிளையை 1941-ம் ஆண்டு கோவில்பட்டியில் நிறுவியது. அந்த நிறுவனத்தில் உரிமையாளர்கள் கோவையில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு வந்து சென்றனர். அவர்கள் எளிதாக விமானத்தில் வந்து செல்ல விமான ஓடுதளம் அமைக்க இடம் தேடினர். அரசிடம் அனுமதி பெற்று ஒப்பந்த அடிப்படையில், தோணுகால் வருவாய் கிராமத்தில் உள்ள மொட்டை மலை அடிவாரத்தில் சுமார் 2 கி.மீ. தூரம் வரை 100 அடி அகலத்தில் விமான ஓடு தளம் அமைத்தனர்.
இந்த விமான ஓடுதளம் 1978-ம் ஆண்டு முதல் செயல்பட்டது. அந்த இடத்தில் அவர்களே பராமரிப்பு பணிகளும் மேற்கொண்டு வந்தனர். இந்த ஓடுதளத்தில் செஸ்னா வகையை சேர்ந்த சிறிய ரக விமானத்தில் அவர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது இலக்குமி ஆலை உரிமையாளர்கள் மட்டுமின்றி பல இடங்களில் இருந்தும் பெரு முதலாளிகள், இவர்களிடம் அனுமதி பெற்று இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி உள்ளனர். 1993-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோவில்பட்டிக்கு வந்தபோது, இந்த ஓடுதளத்தில் தான் அவரது விமானம் இறங்கியது என்பது குறிப்பிடதக்கது.
தற்போது இந்த ஓடுதளம் உள்ள தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. அருகே உள்ள விவசாயிகள் இதனை களமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் மூலம் கோவில்பட்டியில் உள்ள விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி மையமாக நிறுவி தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதை எப்படி விமானப் பயிற்சி மையமாக மாற்றுவது என்பது குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திட்டங்களை வகுத்து வருவதாகவும் தமிழக தொழில் துறை தங்கம் தென்னரசு கூறியுள்ளதையடுத்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது தென்மாவட்ட மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். மேலும் ஓடுதளம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் பல சிறிய ரக விமானங்கள் இங்கு வந்து செல்லும். இதனால் கோவில்பட்டி நகரம் அடுத்தக்கட்ட தொழில் வளர்ச்சியை எட்டும். ஏற்கனவே மத்திய அரசு சிறிய ரக விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், ஓடு தளம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் சிறிய ரக விமானங்கள் அடிக்கடி இங்கு வந்து செல்லும். இதனால் கோவில்பட்டி நகரம் தொழில் வளர்ச்சியில் அடுத்தகட்டத்தை எட்டும். ஏற்கெனவே மத்திய அரசு சிறிய ரக விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்