நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ஆறுமுகம். இவருடைய மனைவி சரஸ்வதி (47), மகன் உதயசங்கர் (20), மகள் சுதா (22). சுதா, நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி மாணவியான சுதா நாங்குநேரியை சேர்ந்த மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையா (24) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பையாவின் அண்ணன் 2 பேரும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளனர். இதனால் இருவீட்டாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுப்பையா உயிரிழந்தார்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பிற்பகல் நாங்குநேரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றிருந்தனர். தூக்குப்போட்டு தற்கொலை காதலன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் சுதா வாழ்க்கையில் வெறுப்படைந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாலையில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது சுதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை அறிந்த அவருடைய உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய சுதாவை கீழே இறக்கி நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தினார். சுதா. உடலை பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
மாலையில் சுதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இருவரின் தற்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்