நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் நேற்று காலை முதல் திடீரென சூறைக்காற்று வீசியதில் மாவடி, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏத்தன், ரஸ்தாலி வகைகளை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை கன்றுகள் சாய்ந்து நாசமாகின.
இதுகுறித்து திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த விவசாயி குணசேகர் கூறியதாவது, ‘பொதுவாக இப்பகுதியில் புரட்டாசி மாதம் காற்று வீசுவதில்லை. தற்போதுதான் புரட்டாசி மாதத்தில் சூறைக்காற்று வீசி எங்களது வாழைகளை நாசம் செய்துள்ளது. எனவே வருவாய்துறையினர் நாசமான வாழைகள் குறித்து கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இதேபோல் பணகுடி, கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பகுதிகளில் நேற்று காலையில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழைகள் சாய்ந்தன. மேலும் கீழஏர்மாள்புரம்-மணிமுத்தாறு செல்லும் சாலையில் தென்னை மரம் ஒன்று ரோட்டில் விழுந்து மின்சாரம் தடைபட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் மின்சாரத் துறையினர் விரைந்து வந்து தென்னை மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
விக்கிரமசிங்கபுரம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்று வீசியது. இதில் விக்கிரமசிங்கபுரம் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் நின்று கொண்டிருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது கோவிலில் பக்தர்கள் சிலர் கோவிலை சுற்றி சுவாமி கும்பிட்டு கொண்டிருந்த நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து பாபநாசம் செல்லும் ரோட்டிலும் ஒரு சில மரங்ளின் கிளைகள் முறிந்து விழுந்தது.
பாபநாசம் கோவிலின் முன்பு படித்துறை பிள்ளையார் கோவில் பின்புறம் நின்று கொண்டிருந்த மருத மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. மேலும் பாபநாசம் கோவில் வெளிப்பகுதியில் நின்று கொண்டிருந்த மின்கம்பம் அருகிலிருந்த கடையின் மீது சாய்ந்தது. விக்கிரமசிங்கபுரம் அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்ததுடன் அப்பகுதியில் வசிக்கும் சமுத்திரபாண்டி, சேகர், முருகன் ஆகியோரது வீட்டின் மேற்கூரைகளும் சேதமடைந்து காற்றில் தூக்கி வீசப்பட்டன. சிவந்திபுரம் பஸ்நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த புளியமரம் வேரோடு பெயர்ந்து அங்குள்ள கட்டிடத்தில் சாய்ந்து நின்றது. மேலும் நெல்லை மாவட்டம் நாகர்கோவில் மெயின் ரோட்டில் நேற்று காலை திடீரென பலத்த சூறை காற்று வீசியது. இதனால் ரெட்டியார்பட்டி, மூன்றடைப்பு, நாங்குநேரி ஆகிய இடங்களில் நேற்று காலை பைக்கில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் திணறினர். ஆகையால் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றதையும் காண முடிந்தது.