கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ திமிங்கல எச்சம் பிடிபட்டது. இது தொடர்பாக ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலரும் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்பது வரலாறு , அப்படி அதிக லாபத்திற்காக செய்யும் பல சட்டவிரோத செயல்களில் கடத்தல் மிக முக்கியம் வாய்ந்தது. இந்திய அளவில் தற்போது அதிக அளவில் கடத்தப்படும் பொருளாக திமிங்கல உமிழ் நீர் (ஆம்பர் கிரீஸ் ) உள்ளது. இது வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதாக கூறப்படுகிறது. 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது.
எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கள்ள சந்தையில் இந்த பொருளுக்கு அதிக மவுசு உள்ளதால் இது அடிக்கடி கடத்தப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் மும்பைக்கு கடத்த இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் வன அதிகாரிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை சோதனை செய்தனர் அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அழகியபாண்டிபுரம் அருகே உள்ள கடிகாரம் மனத்தைச் சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரிய வந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் இரண்டு கிலோ திமிங்கல எச்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையை சேர்ந்த அருள் , மகேஷ், பார்வதிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தைச் சேர்ந்த தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்