தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் மஞ்சள் கடத்தப்பட்டு வந்தது. அதே போன்று, கடல் அட்டை, வெங்காய வித்து, பீடி இலை உள்ளிட்டவையும் கடத்தப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இலங்கையில் இருந்து ஆட்களும் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டனர். இதனால் தூத்துக்குடி கடத்தல் கேந்திரமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதனால் உளவுப்பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




கடந்த ஆண்டு மட்டும் சுமார்  2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம் பீட்டாமைன் போதை பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது முள்ளக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு படகை சோதனை செய்தனர். அந்த படகில் 5 பாக்கெட்டுகளில் கற்கண்டு போன்ற பொருள் இருந்தது. அதனை பரிசோதித்த அதிகாரிகள், பாக்கெட்டுகளில் இருந்த பொருள் கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. இதனை ஐஸ் என்றும், சிந்தடிக் போதை போருள் என்றும் அழைக்கின்றனர். இதில் சுமார் 5 கிலோ 200 கிராம் போதை பொருள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.16 கோடி என்று கூறப்படுகிறது.




இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதை பொருள் மற்றும் படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தி சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடத்தலில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.