பொதுவாக சிகை அலங்கரிக்கும் கடையில் கவர்ச்சி நடிகைகள் படம், அரசியல் தலைவர் படம், அரசியல் பேச்சு, சினிமா பாடல்கள் உள்ளிட்டவைகளே அதிகளவில் பேசப்பட்டு விவாதிக்கப்படும். இது எதுவும் இல்லாமல் சுமார் 2500க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைத்து சலூனில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறார் பொன்.மாரியப்பன். 




தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்.மாரியப்பன் இந்திரா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள், பொன்.மாரியப்பனின் தந்தையும் சலூன் தொழில் செய்து வந்துள்ளார் 8ஆம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத பொன்.மாரியப்பன் தூத்துக்குடி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார் அப்போது வழக்கறிஞர் படிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல படிக்க இயலாததை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார்.




இதனை தொடர்ந்து தங்களது தொழிலாளன முடித்திருத்தகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்பாலும் கைப்பேசி வாட்ஸ் அப்பிலும் தொலைப்பேசியில் பேசி கொண்டும் இருப்பதை கண்ட அவர் வாடிக்கையாளர்களின் மனதை படிப்பின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் தேவையற்றதில் மூழ்காமல் இருக்கவும் தனது கடையில் நூலகத்தை அமைத்துள்ளார் பொன்.மாரியப்பன். கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். புத்தகங்களே துணை என்ற தலைப்பில் அவர் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிப்பரப்பிய அவர், தொடர்ந்து சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார். 




தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள் உபயோகமானதாக இருந்ததா என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார் பொன்.மாரியப்பன். இதனை பார்த்து பலரும் மாரியப்பனுக்கு புத்தகங்களை வாரி வழங்கி உதவினர். குறிப்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, பொன்.மாரியப்பனின் சலூன் கடைக்கே சென்று அவரை பாராட்டியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய சுமார் 50 புத்தகங்களை வழங்கினார்.




மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கடைக்கு வந்து வாழ்த்தியதையும் நினைவு கூறும் பொன் மாரியப்பன், கடந்த 2020 ஆம் ஆண்டு வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி முடித்திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தமிழில் உரையாடி பாராட்டினார். இந்த உரையாடல் வானொலியில் நாடு முழுவதும் ஒலிபரப்பானது.மாரியப்பன் எப்படி இருக்கீங்க எனத் தொடங்கிய பிரதமர் மோடி, சலூன் கடையில் நூலகம் வைக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு தோன்றியது என வினவினார். இதற்கு பதிலளித்த மாரியப்பன், நான் 8-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். குடும்ப சூழ்நிலையால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. சிறிய வயதிலேயே புத்தகங்களை அதிகம் படிப்பேன். எனது கடைக்கு வரும் இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூலகத்தை தொடங்கினேன் என்றார் மாரியப்பன்.




தொடர்ந்து பேசிய பிரதமர், உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என கேட்கிறார். இதற்கு மாரியப்பன் திருக்குறள் என்கிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சி, வாழ்த்துகள் எனக்கூறி பிரதமர் தனது உரையாடலை நிறைவு நிறைவு செய்ததை குறிப்பிடும் இவர், பிரதமர் பாராட்டியதும் அதுவும் தமிழில் பேசியதும் எனது வாழ்வில் மறக்க இயலாத ஒன்றாகி விட்டது என்கிறார்.




நெல்லையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்ற பொன் மாரியப்பன்,அங்கு பல்வேறு தலைப்புகளில் உள்ள புத்தகங்களை சுமார் 5000 ரூபாய்க்கு வாங்கி தனது சலூன் கடை வாடிக்கையாளர்களின் வாசிப்புக்கு தீனி போடும் வகையில் வாங்கி வைத்துள்ளார். இதற்கு தனது தந்தையின் முழு ஒத்துழைப்பும் உள்ளது எனக் கூறும் பொன் மாரியப்பன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் தன்னை ஊக்குவிப்பதாக கூறுகிறார், மகாகவி பாரதி தனது இறுதி வாழ்க்கையின் போது தனது மகள்களிடம் நான் சொத்து எதுவும் சேர்க்கவில்லை ஆனால் புத்தகங்களை எனது எழுத்துக்களை சேர்த்து வைத்துள்ளேன் இது உங்களுக்கு பிற்காலத்தில் உதவும் என பாரதி தெரிவித்ததாக கூறும் இவர் தனது பிள்ளைகளுக்கும் சொத்து சுகம் ஏதும் சேர்க்கவில்லை என்றாலும் புத்தகங்களை சேர்த்து வைத்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார்.