அமாவாசை அன்று முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன, குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் அவர்கள் ஓய்வுக்கு சென்றுவிடுவார்கள், அந்த நேரத்தில் நம் முன்னோர்கள் நம்மை காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதால் பூமிக்கு வருகிறார்கள்.


அதே போல தேவர்களின் ஓய்வு காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி விதமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதாக சாஸ்திரம் சொல்லும் கதையாகும், ஒவ்வொரு அமாவாசை அன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நம் மூத்தோர்கள்.




இந்து மதத்தில் தேவர்கள் என்பவர்கள் எத்தகையானவர்கள் என்றால், கடவுள் என்பவன் இந்துமத தத்துவப்படி ஒருவனே, அவனே படைக்கும் போது பிரம்மாவாகவும், காக்கும் போது விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் இருக்கிறான். கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும், உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் அதனதன் வாழ்வுக்கு ஏற்றுவாறு ஒழுங்குபடுத்தி அமைத்து கொடுப்பது தேவர்கள் ஆகும். 



இது ஒரு புறம் இருக்க,  பேச்சு வழக்கில் கூட யார் செய்த பாவமோ இப்போ நான் அனுபவிக்கிறேன் என்று பலரும் கூறும் வார்த்தையாக நாம் கேட்டு இருக்கலாம்,  நம் முன்னோர்கள்  தெரிந்தோ, தெரியாமலோ பல தவறுகளையும், பாவங்களையும் செய்து இருக்கலாம்,அது நமக்கோ நம் சந்ததியினருக்கோ வந்து சேரும் என சொல்வதுண்டு, முன்னோரின் ஆன்மா மேல் உலகில் எந்த மாதிரியான பலன் அனுபவிக்கிறார்கள் என தெரியாது என்பதாலும் நல்ல நிலையில் இல்லாமல் மேல் உலகில் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் அவர்களுக்கு நல்ல வழியை காட்டும் எனவும், அதனால் அவர்களின் சந்ததியினர் நற்பலனை அடைவார்கள் என நம்  முன்னோர்கள் நமக்கு கூறி உள்ளனர்.


அதே நேரத்தில் அமாவாசை நாளன்று முன்னோர்கள் பூமிக்கு வரும் வேளையில் அந்த குடும்பத்தினர் தர்ப்பணம் செய்யவில்லை என்றால் பூமிக்கு வந்த முன்னோர்கள் நம் குடும்பத்தினர் வரவில்லை என ஏமாற்றமடைந்து செல்வதுண்டு, இதனாலேயே  முன்னோர்களை வணங்காமல் தவிர்த்தால் திருமணம் உள்ளிட்ட சுப காரிய தடைகள், குழந்தை பாக்கிய தடை, தொழில் வளர்ச்சியின்மை, தொழில் தடை, உத்தியோகத்தில் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, தீராத நோய், நீங்காத வறுமை, அகால மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,  




அதே போல மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வர முக்கியமானவர்கள் நம் முன்னோர்கள் தான். அப்படிப்பட்ட முன்னோர்களை நாம்  எப்போதுமே மறக்கக் கூடாது என்பதற்காகவும் முன்னோர்கள் வழிபாடு செய்வதாக சொல்லப்படுவதும் உண்டு, சாதாரணமாகவே நம் வாழ்க்கையில் நம்மை  நல்ல நிலையில் உயர்த்தி விடும் நபரை நாம் மறப்பதில்லை. அதேபோல தான் நமக்கு வாழ்க்கை கொடுத்த நம் பெற்றோர், முன்னோர்களை மறக்கக் கூடாது என்பதற்காக இந்த தர்ப்பணம் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி நமக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை எப்போதும் நினைவு கூற இயலாது என்பதால் இது போன்ற தினங்களிலாவது  வழிபாடு செய்து நம் முன்னோர்களை நினைவு கூறுவோம்