தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக் 1ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார் (31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர் (22), அதிசய பரலோக திரவியம் (25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார் (15), தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன் (23), ஆதிநாராயணன் (20), மகேஷ்குமார் (24), சிலுவை பட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மிக்கேல் (48), விக்னேஷ், (31), மற்றும் மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.


அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா-மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் ஏழுதினார்கள்.




இந்த நிலையில், இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு முன்வந்தது. ஆனால் படகை விடுவிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனை கேட்ட மீனவர்கள் ஊருக்கு (இந்தியா) சென்றால் படகுடன் தான் செல்வோம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 லட்சம் ரூபியா, மீன் பிடித்ததாக 20 லட்சம் ரூபியா, மேலும், அந்நாட்டு உரிமம் இல்லாமல் அக்கடல் பகுதியில் இருந்ததாக சுமார் 20 லட்சம் ரூபியா மொத்தமாக, இந்திய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ஆயிரம் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் ஆகிய இருவர் மாலத்தீவு நாட்டில்  பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரிடம் தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொது மக்கள் மனு அளித்தனர். இது குறித்து, தருவைகுளம் பகுதியை சேர்ந்த பங்குத்தந்தை வின்சென்ட் கூறுகையில்,  தூத்துக்குடி, தருவைகுளம் கிராமத்தில் 12 மீனவர்கள் இந்திய எல்லையில் மீன் பிடிக்கும் போது அங்கு ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக வழி தவறி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது படகோடு சேர்த்து 12 மீனவர்களையும் மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம்.. இந்த படகு கடந்த மாதம் தான் மத்திய அரசினால் மானியம்  அளிக்கப்பட்ட படகு.. இந்த மீனவர்கள் கஷ்டப்பட்டு கடல் அலையில் உழைத்த மக்கள் வழி தவறி போனதால் மாலத்தீவு அரசிடம் பிடிப்பட்டனர். ஆகவே, இந்திய அரசு மீனவர்களையும்,  படகையும் மீட்டு தர வேண்டும். மேலும், 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ஆயிரம் அபராதம் மாலத்தீவு அரசு கேட்டது.  இது அதிகமான தொகை 80 லிருந்து 90 லட்சம்வரை தான் படகு செலவே, பத்து வருடம் மீனவர்கள் உழைத்தாலும் இவ்வளவு சம்பாதிப்பது கஷ்டம், கடன் வாங்கி தொழில் செய்து வருகின்ற இந்த நிலையில் இந்திய அரசு கொஞ்சம் முயற்சி செய்து படகோடு மக்களை மீட்டு கொண்டுவர வேண்டும். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கும் போது அவர், இது நாடு சார்ந்த பிரச்சனை. விரைவாக நடவடிக்கை எடுத்து மீட்டு தருவோம் என்று கூறி இருக்கிறார். மேலும் விரைவில் மீட்கப்பட்டவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்க இருப்பதாக கூறினார்.