நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருமண நிதிஉதவி வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதி உதவி திட்டம் , ஈவேரா மணியம்மை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் நிதி உதவி திட்டம், உள்ளிட்டவைகளில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும்  பட்டப்படிப்பு படித்த 89  பேருக்கு 50 ஆயிரம் ரொக்க பணத்துடன் 1 பவுன் தங்கமும், மேல்நிலை கல்வி வரை படித்த  16 பெண்களுக்கு 25 ஆயிரம் ரொக்க பணத்துடன் 1 பவுன் தங்கமும் என 105 பயனாளிகளுக்கு வழங்கினார்.


மேலும் 2022 -2023 நிதியாண்டிற்க்கு  21 ஏழை பெண்களுக்கு  ரூ1,25,832 மதிப்பீலான தையல் இயந்திரமும் என நிகழ்ச்சியில் மொத்தம் 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 


இந்த விழாவில் சபாநாயகர் பேசுகையில், ”தமிழ் நாட்டில் மறைந்த தலைவர் கலைஞர் தான் ஏழை பெண்கள், தாய்மார்களுக்கு திருமண உதவி திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் திருமணத்திற்கு உதவி செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண்கள் குழந்தைகளை பெற்று கொடுக்கும் இயந்திரமாக இருந்த நிலையை மாற்றியமைத்தது பெரியாரும், நீதிகட்சியும் தான். பெண்களுக்கான முற்போக்கு சிந்தனையை  திராவிட முன்னேற்ற கழகம்தான் எடுத்து வந்தது. தற்போது பெண்கள் பல முக்கிய பதவிகளில் இருக்க முதல்புள்ளி வைத்தது திராவிட இயக்கங்கள் தான். படிக்கும் பெண்களுக்கு திருமண நிதி உதவி கிடைப்பதன் மூலம் அதிகமான பெண்கள் படிக்கத்தொடங்கி உள்ளனர்.


இதுபோன்று ஏராளமான திட்டங்களை தந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். திருமண  உதவி திட்டத்தின் தொடர்ச்சிதான். அதைவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட புதுமைப்பெண் திட்டம். 12 முடித்த பெண்களுக்கு பட்டப்படிப்பில் சேரும் விதமாக பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமை பெண் திட்டத்தை உருவாக்கி கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹ 1000 வழங்கி வருகிறார்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர்  அவர்களால் பெண் கல்வியை ஊக்குவிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் தொடங்கப்பட்டது, அதே போல பெண் காவலர்களை தேர்ந்தெடுக்க சட்டம் கொண்டு வந்ததும் கலைஞர் தான். 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளில் பெண் ஆசிரியைகளை கொண்டு வந்ததும் கலைஞர்தான்.


உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒருவர் பெண்களாக இருக்க வேண்டும் என அதில் பொறுப்புகளை கொடுத்ததும் மறைந்த தலைவர் கலைஞர்தான். இத்திட்டம் ஒரு நாள், இரு நாட்களில் வந்ததல்ல. தொடர்ந்து நூற்றாண்டுகளாக பெரியார் தொடங்கி இன்றைய முதல்வர் வரை பணியாற்றியதன் வெளிப்பாடுதான் இன்று இந்திய வரலாற்றில் பட்டம் படித்தவர்களின் சராசரி 34% என்றால் தமிழகத்தில் பட்டம் படித்தவர்களின் சராசரி 52% க்கு வந்திருக்கிறது என்றால் மறைந்த தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோரை நாம் மறந்து விட முடியாது. 


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஜாதி, சமயம், இனம் என அனைத்தும் கடந்து எல்லோருக்குமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அனைத்து உதவியும் வழங்கும் அரசாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. நாளை மறுநாள்  நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த குடும்ப அட்டையில் இருக்கும் தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றேன்.


குடும்ப அட்டைக்கு மாதம் வழங்கும் ₹1000 என்பது இலவசம் அல்ல, அது பெண்களுக்கான உரிமை தொகை என உரிமைத் தொகையாக அதனை தருகிறார் என்றால் சுயமரியாதையோடு பெண்கள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். பல குடும்பங்களில் எவ்வளவு கஷ்டங்களில் தாய்மார்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை கொண்டு வந்தார். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற அடிப்படை தத்துவத்தை உண்மையை அறிந்த காரணத்தினால் தாய்மார்கள் பிறந்தது முதல் குழந்தைகள் பட்டப்படிப்பு வரை அனைத்தையும் தாங்கி நிற்கின்ற அரசாக இந்த அரசு உள்ளது” என தெரிவித்தார்.