தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம், புதூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், மிளாகய், வெங்காயம் உள்ளிட்ட மானவரி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை விதைத்தும் இந்தாண்டு விவசாயம் கை கொடுக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


                                  

 

 

இப்பகுதியில் விவசாயத்திற்காக ஏற்கெனவே இரண்டு முறை விதைப்பு செய்த நிலையில் மழை பெய்யாமல் போனதால் பயிர்கள் கருகி போனது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நெருங்கியதால் மழையை நம்பி மூன்றாவது முறையாக விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக எட்டயபுரம், அயன்வடமாலபுரம், புதூர் பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மூழ்கி உள்ளது. 
                                  

 

 


 

3 முறை விதைத்தும் விவசாயம் பொய்ததால் அரசு நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி, இருக்கன்குடி அணைக்கட்டு கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே மழைநீர் தேங்கமால் இருக்கும் எனவும் இல்லையென்றால் ஆண்டு தோறும் இதே பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 3 முறையும் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்து வறட்சி மற்றும் தொடர் மழையின் காரணமாக இந்தாண்டு விவசாயம் இப்பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.