மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல தூய்மை பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக துப்புரவுத் தொழிலாளிகள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி மரணம் அடைகின்றனர். உரிய உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை, துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது சட்டப்படி குற்றமாகும். எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும். 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
அதற்கு சாட்சியாக, ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி இன்று 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் மற்றும் நகராட்சி கமிசனர் முன்பாகவே வெறும் கைகளால் குப்பை கழிவுகளை அகற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளியையொட்டி ராமநாதபுரம் நகா் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக 35 டன் குப்பைகள் குவிந்துள்ள நிலையில், அவைகளை அகற்றும் பணியில் 240 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள தூய்மை பணியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் யாருக்கும் கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் குப்பைகளை அள்ளும் நிலை காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின்போது நகராட்சி பகுதியில் மட்டும் காய்கனிகள், வெடிகள் என மொத்தம் 35 டன் குப்பைகள் குவிந்துள்ளன. அரண்மனை ரோடு, சாலைத்தெரு, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் அப்பகுதி குடியிருப்புகள், மற்றும் சந்தைதிடல், ராஜவீதி, சாலைத்தெரு, அக்ரஹாரம் தெரு, ஆகியவற்றில் மட்டும் மொத்தம் 10 டன்னுக்கும் அதிகமான காய்கனிக்கழிவுகள் மற்றும் பட்டாசுக் கழிவுகள் குவிந்தன. இந்தக் கழிவுகளை இன்று காலை முதல் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தக் கழிவுகள் அகற்றும் பணி பகலிலும் தொடா்ந்தது நடந்து வருகிறது.
நகராட்சிப் பகுதியில் வெடிகள் வெடித்த கழிவுகள் உள்ளிட்டவை என மொத்தம் தீபாவளிக்கு மட்டும் 35 டன் கழிவுகள் தேங்கியுள்ளன. அவைகளை அகற்றும் பணியில் 240 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். ஆனால் இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் வழங்காமல் உள்ளனர்.
'குப்பை லாரிகளை தள்ளி விடும் நிலை'
அதே போன்று 3 லாரிகள் மற்றும் டிராக்டா்கள் மூலம் நகராட்சி முழுவதும் சேகரித்து அள்ளப்படும் கழிவுகளை ஏற்றி பட்டினம் காத்தான் பகுதியில் உள்ள குப்பை கிட்டங்கிக்குக் கொண்டு சென்று கொட்டப்பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்களை முறையாக பராமரிக்காததால் வாகனங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி வாகனங்களில் கொட்டுவது மட்டுமின்றி அந்த குப்பை லாரிகளை தள்ளிவிடும் அவல நிலையும் இங்கு நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று நகராட்சி முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளும் பணிகளை பார்வையிட அந்தப் பகுதிகளுக்கு ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நீலேஸ்வர் வந்தபோதும் கூட, தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பை அள்ளுவதை அவர்கள் யாரும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை, மேலும் அவர்கள் முன்னிலையில் குப்பை வாகனத்தை வெகுதூரம் வரை தள்ளிச் சென்ற அவல நிலையும் உள்ளது. சமூக நீதிக்கும், மனித நேயத்துக்கும் சிறந்த மாநிலமாக இருக்கும் தமிழகம் துப்புரவு பணியாளர்களின் விஷயத்தில் மட்டும் ஏன் இன்னும் கவனம் செலுத்தாமல் தாமதிக்கிறது என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.