கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களையும், கடைகள் மற்றும் வீடுகளையும் கோவில் நிர்வாகம் தனிநபருக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால் வாடகை மற்றும் குத்தகைக்கு எடுத்தவர்கள் அறநிலையத் துறைக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டாமல் பல கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகைதாரர்கள் உடனே பணத்தை கட்ட வேண்டும் எனவும், கட்ட தவறும் பட்சத்தில் கடைகள் மற்றும் குத்தகைதாரர்களின் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்றும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து 7 கோடி வரை நிலுவையில் இருந்த நிலையில் சுமார் 1.5 கோடி வரை கடந்த பத்து நாட்களில் வசூலாகி உள்ளதாக இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்துக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோவில் உள்துறை பணியாளர்கள் சம்பள விகிதத்தை உயர்த்தி தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் இதுபற்றி முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறியதன் பேரில் உள்துறை பணியாளர்கள் அனைவருக்கும் மாத சம்பளத்தில் 2 ஆயிரம் உயர்த்தி (இடைக்கால நிவாரண உதவி தொகை) வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பள உயர்வு வழங்கிய முதல்-அமைச்சருக்கும், இதற்கு பரிந்துரை செய்த அறநிலையத்துறை அமைச்சருக்கும் குமரி மாவட்ட கோவில் உள்துறை பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.