தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 36 அலுவலர்கள் 18 குழுக்களாக பிரிந்து விசைப்படகுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.




தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆண்டுதோறும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் போது, படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ReALCraft என்ற வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.




அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகளையும் ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தலா 2 அலுவலர்கள் கொண்ட 18 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 266 விசைப்படகுகள், தருவைகுளத்தில் 243 விசைப்படகுகள், வேம்பாரில் 40 விசைப்படகுகள், திரேஸ்புரத்தில் 2 விசைப்படகுகள் என மொத்தம் 551 விசைப்படகுகள் உள்ளன. தூத்துக்குடி மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) காசிநாத பாண்டியன், உதவி இயக்குநர்கள் விஜயராகவன், புஸ்ரா சப்னம், மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் 36 அலுவலர்கள் 18 குழுக்களாக பிரிந்து விசைப்படகுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.




விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி உடையவையா, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். இந்த ஆய்வு அறிக்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில்  விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மீன் வளத் துறை அதிகாரிகள் தூத்துக்குடி தருவைகுளம் உள்ளிட்ட விசைப்படகுகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.