தூத்துக்குடி அருகே குரும்பூர் வாலிபருக்கு கர்நாடகா மர்ம கும்பலால் அடி உதை விழுந்தது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ஆலடிவிளையைச் சேர்ந்த முத்து மகன் பிரபு(35). இவர் கடந்த 5 மாதங்களாக கர்நாடகா மாநிலம் தாவணிக்கரை பகுதியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிம்சோன்ராஜ் மிட்டாய் கம்பெனியில் ஆட்டோ டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19ம் தேதி இரவு 10 மணியளவில் தாவணிக்கரை பூதல் ரோடு செக்போஸ்ட் அருகே வைத்து பிரபுவின் செல்போன் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மர்மநபர் எடுத்துள்ளார். இதனை பிரபு தட்டிகேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர் பணம் கொடுத்தால் தான் தருவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபருக்கு ஆதரவாக 5க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து பிரபுவை கொடூரமாக தாக்கி முகத்திலும், உடலில் அடித்து உதைத்துள்ளனர். மேலும் பிரவுவின் ஆடைகளை கிழித்து அடித்து உதைத்து வீடியோ எடுத்துள்ளனர். இதில் பிரபு நடக்க முடியாமல் பக்கத்து செக்போஸ்ட்டிற்கு சென்று அங்கிருந்து போலீசாரிடம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசாரும் பிரபுவிடம் நீ தான் தவறு செய்திருப்பாய் என கூறி, அவரது சட்டைபையை சோதனையிட்டுள்ளனர். அதிகாலை 3 மணி வரை அங்கேயே உட்கார வைத்துள்ளனர்.
இதற்கிடையே அந்த மர்மகும்பல் செக்போஸ்ட்டிற்கு வந்து மீண்டும் பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அடி தாங்க முடியாமல் பிரபு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் தர முடியாது என கூறி அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லையாம். பின்னர் பிரபு அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்து தப்பித்து சுமார் 13 கி.மீ., தூரம் நடந்தே மிட்டாய் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கே நடந்த சம்பவத்தை பிரவு கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்களும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களை பகைக்க முடியாது என கூறி பிரபுவை ஊருக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். கண் மற்றும் முகம், உடலில் பலத்த காயத்துடன் பிரபு இரண்டு தினங்களுக்கு முன் சொந்த ஊரான குரும்பூருக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்துவீட்டில் மனைவி மற்றும் உறவினர்களிடம் பிரபு கூறியுள்ளார். பலத்த காயத்துடன் பிரபு மற்றும் குடும்பத்தினர் கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தனர். மேலும் படுகாயமடைந்த பிரபு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட வாலிபருக்கு கர்நாடகாவில் நடந்த இந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவுக்கு கட்டையால் தாக்கியதில் அவருக்கு நெஞ்சு மற்றும் விலா எலும்பு பகுதியில் அடிப்பட்டுள்ளது. விலா பகுதியில் உள்ளே ரத்த கசிவு உள்ளது அதற்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. சரியாகவில்லை என்றால் டியூப் போட்டு அசுத்த ரத்தம் வெளியேற்றப்படும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் MRI ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது, இரு கண்களிலும் அடிப்பட்டுள்ளது அதற்காக கண் டாக்டரை பார்க்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார். தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.