வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது - சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் கருத்து பதிவு.



Vaazhai Movie : 'இது என் படம்'....  மாரி செல்வராஜின் வாழைக்கு உரிமை கொண்டாடும் எழுத்தாளர்


பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக உருவெடுத்துள்ளவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. பரியேறும் பெருமாள், கர்ணன் படம்போலவே திருநெல்வேலியே இந்த படத்திற்கும் கதைக்களம். பள்ளி சிறுவனான சிவனைந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.




படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியே பெரும் பலமாக அமைகிறது. பள்ளி ஆண்டு விழாவிற்கு நடனம் ஆட ஒத்திகை பார்க்கச் செல்லும் சிவனைந்தம் எதிர்கொள்ளும் சிக்கலும், அதேசமயம் அங்கே ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவுக்கு நிகழும் மற்றொரு சம்பவமும் நம் மனதை ரணமாக்குகிறது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராதது. பலரையும் கண்ணீரில் நனையவைக்கிறது. அம்பேத்கரை சில காட்சிகளில் காட்டி அவரைப் பற்றிய புரிதல் அனைவருக்கும் எந்தளவு அவசியம் என்பதையும் உணர்த்தியுள்ளார் மாரிசெல்வராஜ்.


வாழை திரைப்படம் யதார்த்த களத்தில் பயணித்து பலத்த வரவேற்பை பெற்று உள்ளது. வாழையில் நடித்த கோவில்பட்டி சிறுவனுக்கு த.வெ.க தலைவர் விஜய் உதவி செய்து உள்ளார். பலதரப்பினரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ள வாழை திரைப்படத்தை குறித்த சோ.தர்மனின் பதிவு இதோ...


 




ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள்,சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.


வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச் சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.


 




 கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்."என்னை வாழை வாழ வைக்கவில்லை. என்னுடைய சிறுகதையை வாசிக்க லிங்க் கொடுத்திருக்கிறேன். வாசியுங்கள்.