தூத்துக்குடி-வாஞ்சிமணியாச்சி பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மாதத்திற்கு பயணிகள் சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையம்: 

முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது, தூத்துக்குடியில் இருந்து அண்டை மாவட்டங்களான திருநெல்வெலி, விருதுநகர், மதுரை ஆகிய இடங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து சேவைகளையே பிரதான போக்குவரத்தாக உள்ளது. குறிப்பாக சென்னை, கேரளா, கர்நாடகா போன்ற ஊர்களுக்கு தினமும் ரயில் சேவை உள்ளது. இது மட்டுமின்றி வாஞ்சி மணியாச்சி மற்றும் திருநெல்வெலிக்கு தினமும் பயணிகள் ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை நம்பி பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வியாபாரிகள் உள்ளனர்.
 

ரயில் சேவை ரத்து:

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைக்காலங்கள் மழைநீர் தேங்குவதால் ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது, இதனை தவிர்ப்பதற்காக ரயில் நிலைய தண்டவாளத்தை உயர்த்தும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் எண் 56724 நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 04.04.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56725) நாளை முதல் 04.04.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 
 
இதே போல வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் எண்: 56726 நாளை மறுநாள் 07.03.25 (வெள்ளிக்கிழமை) முதல் 05.04.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் எண்:56723 நாளை மறுநாள் 07.03.25 (வெள்ளிக்கிழமை) முதல் 05.04.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது" என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் அவதி:

இந்த நான்கு பயணிகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர், இந்த நான்கு ரயில்களும் குருவாயூர் மற்றும் நாகர்கோவில்-கோவை விரைவு ரயில்களுக்கு இணைப்பு ரயிலாக உள்ளதால் பொதுமக்கள் அந்த ரயில்களை பிடிக்க சூழல் உருவாகியுள்ளது.