Railway Update: பராமரிப்பு பணிகள் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் குறிப்பிட்ட ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே பராமரிப்பு பணிகள்:

ரயில் போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் தொலைதூர ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தென்மாவட்ட மக்கள் எழும்பூர் வரை நேரடியாக பயணிக்க முடியாமல், பாதி வழியிலேயே இறங்கி கூடுதல் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்ட மக்கள் ஷாக்..!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான நான்காவது வழித்தடத்தில் மார்ச் 5 முதல் 9 வரை பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் பல ரயில்கள் குறுகிய கால நிறுத்தம், பகுதியளவு ரத்து அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் பல ரயில்கள் நேரடியாக எழும்பூருக்கு வராமல் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் போன்ற ரயில் நிலையங்களோடு தங்களது சேவைகளை நிறுத்துகின்றன. இதனால் தென்மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்?

காரைக்குடி, மன்னார்குடி, திருநெல்வேலி, மண்டபம் மற்றும் தூத்துக்குடியிலிருந்து வரும் விரைவு ரயில்கள் சென்னை எழும்பூரை அடையாது.  இதனால் பயணிகள் செங்கல்பட்டு அல்லது தாம்பரத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் சில ரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்படும். மதுரை, ஐதராபாத், ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் சில ரயில்களின் புறப்படும் இடம்,  எழும்பூரிலிருந்து தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

வ. எண் ரயில்கள் மாற்றம்
1 பல்லவன் SF விரைவு ரயில்  தாம்பரம் நிறுத்தம்
2 மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் தாம்பரம் நிறுத்தம்
3 நெல்லை SF விரைவு ரயில்  செங்கல்பட்டு நிறுத்தம்
4 முத்து நகர் விரைவு ரயில் மாம்பலம் நிறுத்தம்
5 வைகை SF விரைவு ரயில்  தாம்பரம் நிறுத்தம்
6 செகந்திரபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் பெரம்பூர் வழியாக மாற்றம்

திருப்பி விடப்படும் ரயில்கள்:

எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற நிலையங்களைத் தவிர்க்கும் வகையில் பல ரயில்கள் திருப்பி விடப்படும். செகந்திராபாத், காக்கிநாடா, கச்சேகுடா மற்றும் மண்டபம் ஆகிய இடங்களிலிருந்து வரும் ரயில்கள் கொருக்குப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் வழியாகச் செல்லும். தவறவிட்ட ரயில் நிலையங்களை ஈடுசெய்ய பெரம்பூர் மற்றும் கடற்கரையில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவதி:

சென்னை-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயண தொலைவில் உள்ள, செங்கல்பட்டில் ரயில்களை நிறுத்துவது கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  மேலும் உள்ளூர் ரயில் சேவைகள் மிகவும் அரிதாகவே உள்ளன எனவும் குறிப்பிடுகின்றனர்.

தெற்கிலிருந்து வரும் பெரும்பாலான ரயில்கள் சென்னையை அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில் தான் அடையும். அந்த ரயில்கள் தற்போது செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும் என கூறப்பட்டட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தாம்பரத்திற்கு நேரடி பேருந்துகள் 15-20 நிமிடங்களுக்கு ஒன்று மட்டுமே இருக்கும். மேலும் ஆட்டோரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.