ISRO Spaceport Kulasekarapattinam: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் - பூமி பூஜை


விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது உள்நாட்டு செயற்கைகோள்கள் மட்டுமின்றி, வணிக நோக்கில் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைதொடர்ந்து இன்று பூமி பூஜையும் போடப்பட்டுள்ளது.



குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் - வசதிகள்


புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளத்திற்கான BED அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில், இன்று நடைபெற்ற இஸ்ரோ அதிகாரிகள் பங்கேற்ற பூமி பூஜையை தொடர்ந்து கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, UPPER STAGE ASSEMBLY FECILITY, LAUNCH SERVICE BUILDING, மற்றும் எஸ்எஸ்எல்வி லான்ச் காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.


மேலும், ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகள், அசெம்பிளி அரங்குகள் மற்றும் ஏவுதள நடவடிக்கைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும். மொபைல் ஏவுதள அமைப்பு (MLS), செக்அவுட் கணினிகள், போர்டபுள் ரேடார், ஒரு திட-நிலை டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரேஞ்ச் கிளியரன்ஸ் நடைமுறைகளையும் கொண்டிருக்கும்.  இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர இஸ்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?



  • ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ஏவுதளத்தை விட பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பது இதன் முக்கிய அம்சமாகும்.

  • சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC) நீண்ட பாதையை  ஒப்பிடும்போது, நேரடி தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதலுக்கு குலசை ஏவுதளம் உதவுகிறது. இதன் மூலம் எரிபொருள் செலவும் கணிசமாக குறையும்.

  • பூமத்திய ரேகைக்கு ஏவுதளம் அருகாமையில் இருப்பதால், ராக்கெட் புறப்படும்போது வேகத்தை அதிகரிக்க முடியும், இது பேலோடு திறனை அதிகரிக்கிறது

  • குலசை விண்வெளி ஏவுதளம் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது ராக்கெட் உதிரிபாகங்களையும், எதிர்பாராத சிக்கல் ஏற்படும்போது ராக்கெட்டை கடலில் செலுத்துவதற்கும் சாதகமாக உள்ளது.


ஏவுதளத்தின் பிரதான நோக்கமும் & பலன்களும்:



  • நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமான குலசேகரப்பட்டினம், சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களை (SSLV) விண்ணில் (Lower Earth Orbit) ஏவுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைக்கப்படுகிறது.

  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் வளைந்து பயணிக்க வேண்டி இருப்பதால் அதிக எரிபொருள் செலவு ஏற்படுகிறது. ஆனால், குலசை ஏவுதளத்தால் அந்த செலவு கணிசமாக குறையும்.

  • குலசை ஏவுதளத்தில் இருந்து ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  • விண்வெளி சார்ந்த தரவு, தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வர்த்தகத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்த ஏவுதளம் உதவும்