தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 17, 18-ந் தேதிகளில் தூத்துக்குடியில் அதிகனமழை பெய்தது. இதனால் மின்சார தேவை குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 17-ந் தேதி அனல்மின்நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி எந்திரங்களிலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் கனமழை காரணமாக மழை வெள்ளம் அனல்மின்நிலையத்துக்குள் புகுந்தது. இந்த வெள்ளம் மின் உற்பத்தி எந்திரங்களையும் சூழ்ந்தது. இதனால் மழை நின்றபிறகு மின்உற்பத்தி எந்திரங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மின்வாரிய இயக்குனர்(இயக்கம்) ராஜேந்திரன் தூத்துக்குடிக்கு வந்தார். அவரது மேற்பார்வையில் அனல்மின்நிலையத்தில் உள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீரில் மூழ்கிய எந்திரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் 1050 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த எந்திரங்கள் முழுமையாக பராமரிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் 2 மின்உற்பத்தி எந்திரங்களில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்றும், படிப்படியாக மற்ற மின்உற்பத்தி எந்திரங்களிலும் மின்உற்பத்தி தொடங்கும் என்றும் அனல்மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்