கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மீண்டும் வரும் நிலையில் இன்று முதல் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய இரு  தினங்களில் அதீத  கனமழை பெய்தது.  இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் முழுவீச்சில் களம் கண்டாலும் மக்களை மீட்பதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை,தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை மேற்கொண்டார். இதனையடுத்து இரண்டு மாவட்டங்களிலும் அனைத்து ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண நிதியாக ரூ.1,000 அறிவிக்கப்பட்டது. 


அதேசமயம் திருநெல்வேலியில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பிய நிலையில், தூத்துக்குடி இன்னும் மீளவே இல்லை. தண்ணீர் முழுமையாக வடியாத நிலையில் மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தண்டவாளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் பல ரயில்கள் அடுத்தடுத்த தினங்கள் நெல்லை, கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படவில்லை.


மாறாக அந்த ரயில் போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே திருநெல்வேலியில் இயல்பு நிலை திரும்பியதால் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 தினங்களாக செயல்படாமல் இருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில் 5 நாட்களுக்குப் பின் இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6 மணியளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று முதல் வழக்கம்போல ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே தண்டவாளங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மேலும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் திருச்செந்தூர் வழித்தடத்தில் ரயில்கள் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.