தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வெள்ள பாதிப்புகளை சரி செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விரைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பது, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்து உள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக, மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் கானொலி காட்சி மூலம் நிவாரண பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து பணிகளை விரைவுபடுத்தினார்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார்.தூத்துக்குடி மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேத விவரங்களையும், அவர்களின் கோரிக்கையையும் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நிவாரண மையத்துக்கு வந்தார். அந்த மையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையண்ட்நகர், அண்ணாநகர், ஆசிரியர் காலனி, ராஜீவ்நகர், சிலோன் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 600 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நிவாரண மையத்தில் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அந்த நிவாரண மையத்தில் தங்கி இருந்த மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட், ரொட்டி, பால்பவுடர், தண்ணீர் பாட்டில உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து எட்டயபுரம் ரோடு 3-வது ரெயில்வே கேட் மேம்பாலத்தில் இருந்து மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். உடனடியாக வெள்ள நீரை அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே போன்று குறிஞ்சிநகர், போல்பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். வெள்ளநீரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.