கேரள மாநிலம் கோழிகோட்டிலிருந்து மீன்கழிவுகளை ஏற்றி தமிழகத்தில் கொட்ட கொண்டு வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.




கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள், மீன்கழிவுகள், மருத்துவ கழிவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி மீன் கழிவுகளை ஏற்றி வருவதை கண்டு தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த லாரி குழித்துறை நகராட்சி குப்பை குடோன் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் குப்பை குடோனில் அந்த கழிவுகளை கொட்ட கொண்டு வந்திருப்பதாக நினைத்து அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து கன்டெய்னர் லாரியை கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.




கேரளாவில் இருந்து நாள்தோறும் 100 டன்னுக்கும் மேற்பட்ட மீன் கழிவுகள், இறைச்சி, எலும்புகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த முறையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்காததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது. பன்றிப் பண்ணைகளுக்கு உணவு கொண்டு செல்வதாக கூறி இந்த வாகனங்கள் செல்வது வழக்கமாக உள்ளது. வழிநெடுகிலும் அடிக்கும் துர்நாற்றத்தால் கிராம மக்கள் விரட்டிச் சென்று வாகனங்களை பிடிப்பதும், காவல் நிலையங்களில் ஒப்படைப்பதும் தொடர்கதையாகி உள்ளது.




கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் களியக்காவிளை உட்பட கேரள சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் கண்களில் இருந்தும் தப்பி எப்படி இந்த வாகனங்கள் பயணிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ, மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை கட்டுப்படுத்த சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கல், ஜல்லி உட்பட கனிம வளங்கள் தினமும் 600 டாரஸ் லாரிகளுக்கு மேல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.