தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இதுவரையில் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டம் - கிடப்பில் போடப்பட்டது ஏன் ?


தமிழக அரசு கடந்த 2013ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தனியார் பங்களிப்பு பொதுத்துறை வாயிலாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கப்பல்கட்டும் தளம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 7 ஆயிரத்து 500 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவித்து இருந்தது. இது குறித்து தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் வடபாகம், வைப்பாறு மற்றும் பழைய காயல் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதனபிறகு, மத்திய கப்பல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இடத்தினை தேர்வு செய்வார்கள் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.



கப்பல் கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா ?


தூத்துக்குடி மாவட்டம் துறைமுக வளர்ச்சியினை கொண்டு பல்வேறு தொழிற்சாலைகள் அமையப்பெற்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மற்றும் பொதுத்துறைகள் மூலம் தற்போது சுமார் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பெரும்பாலான அனல்மின் நிலையங்கள் நிலக்கரியினை மூலமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.


இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஆண்டொன்றிற்கு சுமார் 1600 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதத்தினை அதிகரித்து வரும் துறைமுகத்திற்கு கப்பல்கட்டும் தளமும் அமையுமானால் கூடுதலாக நன்மையும் வருவாயும் அன்னிய செலவாணியும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த கப்பல் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




துறைமுகத்தில் கையாளப்படும் சரக்கு பெட்டகம்


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துவக்கத்தில் இரண்டு தளமாக இருந்தது தற்போது சரக்குப்பெட்டகம் கையாளுவதற்கென தனியார் வசம் இரண்டு தளங்கள், ஸ்டெர்லைட் காப்பர், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கையாளப்படும் வகையிலும் அரசு மற்றும் தனியார் ஆலைகளுக்கு தேவையான நிலக்கரியினை கையாள்வதற்கென தனித்தளங்கள் உட்பட 13 தளங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான காப்பர் கான்சன்ட்ரேட் இறக்குமதி முற்றிலும் நின்று போனது. தற்போதைய நிலையில் தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் நிலக்கரி, மரத்தடிகள், இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் 40 மில்லியன் டன் சரக்குகளுக்கும், சரக்குப்பெட்டகம் கையாளுவதில் கப்பல்த்துறை அமைச்சகம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கையாளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


ஆண்டிற்கு 1,500 கப்பல்கள் வரும் பெரிய துறைமுகம்


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1,500 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. மேலும், ஆண்டுதோறும் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் கப்பல் பழுது பார்க்கும் தளமும் ஏற்படும் என்பதால் விரைவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வேண்டும் அதே நேரத்தில் தூத்துக்குடி துறைமுகம் வரும் கப்பல்களில் பழுது ஏற்பட்டால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அன்னிய செலவாணி பாதிக்கப்படுகிறது என்கின்றனர் துறைமுக உபயோகிப்பாளர்கள்.


தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் துடிசியா அமைப்பினை சேர்ந்தவர்கள்.தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், தென்மாவட்ட வளர்ச்சி மற்றும் துறைமுகத்தின் வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும் என்கின்றனர் கப்பல் முகவர்கள் , துறைமுக உபயோகிப்பாளர்கள் , சரக்கு கையாளும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இந்த முக்கிய திட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!