வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேலவைத்தலம் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா(வயது 34). இவர் தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் தனது 4 மாத பெண் குழந்தையுடன் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே சாலையோர நடைபாதையில் தங்கி இருந்தார். கடந்த 8-ந் தேதி இரவு 4 மாத குழந்தையுடன் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். திடீரென கண்விழித்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா, தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 30 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். 150 கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் கிடைத்த சந்தேக நபர்கள் 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கு அந்த சந்தேக நபர்கள் குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து மர்ம ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் சாமி என்ற கருப்பசாமி(வயது 47), ஆலங்குளம் கரும்பனூரை சேர்ந்த ராஜன் என்ற ராஜா(53) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பெண் குழந்தைகளை போலீசார் மீட்டனர். இது குறித்து தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சமீபத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தமிழகத்தை சேர்ந்த குற்றவாளிகள், பாதுகாப்பு இன்றி ரோட்டோரங்களில் படுத்து இருக்கும் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து உள்ளனர். இது தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்திலும், 2023-ம் ஆண்டு குலசேகரன்பட்டினத்திலும் குழந்தை கடத்தல் வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த 9-ந் தேதி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அந்தோணியார் கோவில் அருகே 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது.
இந்த வழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறு, சிறு தடயங்களையும், அறிவியல் பூர்வமாக அணுகி வழக்கில் தீர்வு காணப்பட்டு உள்ளது. விசாரணை அடிப்படையில் ஆலங்குளத்தை சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி, ராஜன் என்ற ராஜா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஏற்கனவே 3 குழந்தைகளை திருடி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 குழந்தைகளையும் மீட்டு உள்ளோம். ஒரு குழந்தைக்கு எந்தவித புகாரும் இல்லை. இதனால் அந்த குழந்தையின் பெற்றோரை தேட உள்ளோம். கைது செய்யப்பட்ட 2 பேரும் 2022 முதல் இந்த குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு இவர்களுக்கு எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை. இவர்கள் குழந்தையை கடத்தி சென்று குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர். அவர்கள் முன்கூட்டியே ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டறிந்து உள்ளனர். பின்னர் குழந்தையை கடத்தி சென்று, இந்த குழந்தை மலைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தை. அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாததால், கொடுப்பதாக கூறி விற்பனை செய்து உள்ளனர். மீட்கப்பட்ட 4 குழந்தைகளையும் ‘குழந்தைகள் நலக்குழு” மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின் பெற்றோரை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
மேலும் குழந்தை கடத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஏதேனும் தகவல்கள் வந்தால், பொதுமக்கள் யாரும் அதனை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டாம். அதற்கு பதிலாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து உடனடியாக அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் கடத்தப்பட்டதாக வதந்திகள் பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வாங்கிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பேட்டியின் போது நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி குழந்தைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மதுரை தென்மண்டல ஐ.ஜி கண்ணன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.