கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பநிலை அதிகரித்து மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் வேகமாக வெளிருதல் (Coral Bleaching) ஏற்பட்டு பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன.




இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் மன்னார் வளைகுடாவும் ஒன்று. இங்குள்ள 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகமாக அமைந்துள்ளன. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும், உணவு மற்றும் இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. எனவே, இவற்றை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக சார்ந்துள்ளனர். மேலும், கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் இந்த பவளப்பாறைகள் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளன.




மன்னார் வளைகுடா பகுதியில் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் இருந்தன. பவளப்பாறைகளை வெட்டி எடுத்தல், முறையற்ற மீன்பிடிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பவளப்பாறைகள் நாளுக்கு நாள் அழிந்தன. கடந்த 50 ஆண்டுகளில் மன்னார் வளைகுடா பகுதியில் 30 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் முற்றிலும் அழிந்து போய்விட்டன. இதையடுத்து பவளப்பாறைகளை வெட்டி எடுக்க மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்தது. அதன்பிறகு ஏற்கனவே அழிந்த பகுதிகளில் பவளப்பாறைகளை மீண்டும் துளிர்விட்டு வளரத் தொடங்கின.




ஆனால், புவி வெப்பமயமாதல் என்ற புதிய ஆபத்து தற்போது பவளப்பாறைகளை பாதிக்க தொடங்கியுள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக பவளப்பாறைகளில் வெளிருதல் (Coral Bleaching) ஏற்பட்டு பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடல் வெப்பநிலை வழக்கத்தை விட உயர்வாக காணப்படுகிறது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் கடந்த 2 மாதங்களாக வெளிருதல் அதிகமாக ஏற்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பவளப்பாறைகளில் வெளிருதல் வேகமாக ஏற்பட்டு வந்த போதிலும், இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. வெப்பநிலை குறையாமல் இதே நிலை மேலும் தொடர்ந்தால் பவளப்பாறைகள் மடியும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவ மக்கள் பேரவையின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ் கூறும்போது, காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளுக்கு இடையிலான குழு (ஐபிசிசி) பருவநிலை மாற்றங்கள் குறித்த மதிப்பீடு அறிக்கையை 1991ல் இருந்தே வெளியிட்டு வருகின்றனர். இதில் ஐபிசிசி ஐந்தாவது (2014) மற்றும் அறாவது (2023) மதிப்பீட்டு அறிக்கையில் இது தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டு உள்ளனர். இதுதொடர்பான ஆய்வறிக்கையில் கடலோரங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது. பெருங்கடலோரங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கையில் சிகப்பு எச்சரிக்கையும் வெளியிட்டு உள்ளதாக கூறும் இவர், பல்லுயிர் பெருக்கம் இருப்பதால் மீன்கள் இடம் பெயரும் நிலை உள்ளதாகவும் இதனால் கடலுக்கு மீனவர்கள் சென்றால் மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மீன்கள் கடலில் இல்லை என்பதல்ல, மீன்கள் அரியவகை உயிரினம், கடலில் உள்ள தட்பவெப்பம் (குறிப்பாக .0001 சதம் அளவு) சிறிது மாறினாலும் கடலில் உள்ள மீன்கள், சரியான தட்ப வெப்பம் உள்ள பகுதிகளுக்கு இடத்தை மாற்றி கொள்ளும் என்கிறார். இது தொடர்ச்சியாக நடக்கும் போது மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைப்பதில்லை, இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார்.




மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாக கடலில் பேரிடர்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டும் இவர், இதனால் மீனவர்கள் இடம் பெயரக்கூடும் அதே நேரத்தில் கடலோர தாழ்வான பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது என அந்த ஆய்வறிக்கையில் உள்ளது என்கிறார். 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட "மாறிவரும் காலநிலையில் பெருங்கடல் மற்றும் கிரையோஸ்பியர் " பற்றிய சிறப்பு அறிக்கையில் கடல் தட்பவெப்பம் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே எல்நினோ போன்றவை ஏற்படும் நிலை உள்ளது என்கிறார்.




கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து யாரும் பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை எனக்கூறும் இவர், காலநிலை மாற்றம் அல்ல இது, தற்போது நடைபெறுவது காலநிலை குழப்ப நிலை எனக்கூறும் ஜோன்ஸ், பெருமழை பாலைவனத்திலேயே பெய்யும் நிலை என்பது காலநிலையின் குழப்பநிலையின் காரணமாக ஏற்பட்டு உள்ளதாகவும் பகீர் தகவலை தெரிவிக்கிறார். பருவநிலை பேசுவோர்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமிலவாயு குறைக்கனும் என பேசுகின்றனர். ஆனால் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை, இதில் அதிகம் பாதிக்கப்படுவது கடலோடிகள் என்றழைக்கப்படும் பூர்வகுடிமக்கள் தான் என்கிறார்.