பதினேழு ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாத நாற்பதாயிரம் ஊரணிகள், கனமழை பெய்தும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் பன்னிரண்டு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து நான்கு ஊராட்சிகள் உள்ளன. இவ்வுராட்சிகளில் சுமார் 41,948 ஊரணிகள், குட்டைகள், பாசன கண்மாய்கள், குளங்கள், உள்ளன. தவிர தமிழகத்தில் 46ஆறுகள், 81 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் உள்ளன. தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை. சுமார் 40% மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்கின்றனர். கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் தமிழக அரசால் இயந்திரங்கள் மூலம் ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளான ஊரணிகள், குட்டைகள், வரத்துகள் அந்தந்த ஆண்டு நிதிநிலை மைக்கேற்ப தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டன.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாருதல், வரத்துக்கால் தூர்வாருதல் பனியை இயந்திரங்கள் கொண்டு தூர் வாரும் வகையில் விதிமுறைகளை திருத்தம் செய்து வரக்கூடிய வடகிழக்கு பருவ மழைக்கு முன் ஊராட்சிகளில் உள்ள வரத்துக் கால்வாய், குளம், குட்டை ஊரணிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.