நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டியளித்தார்.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் பழரசம் வழங்கினார்.

Continues below advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டண உயர்வு சொத்து வரி, உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்திருக்கும் என நம்புகிறோம். திமுக ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எல்லாம் பார்க்கும் போது திமுக அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார்.