தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைப்பெற்று வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல்,  உப்பு பண்டல் கட்டுதல், உப்பு  பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு  கூடையுடன் தலையில் சுமந்து உப்பு  அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது. குடும்ப சூழல் , பொருளாதார நிலை உள்ளிட்டவைகளால் இப்பணிகளை செய்து வந்தாலும் கூட மழை காலம் வந்தால் அதிலும் மண் விழுந்து மூன்று மாத காலம் வேலை இழப்பு என கண்ணீரில் கரைகின்றனர் தொழிலாளிகள். 




உப்பள தொழில் பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டுமே நடைபெறும் நிலையுள்ளது. மழை காலங்களில் உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கிவிடுவதால்  உப்பு  உற்பத்தி சுமார் 2 மாத காலம் நடைபெறுவதில்லை. இந்த மழை காலங்களில் உப்பளத்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந் 17,18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த உப்பளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உப்பளங்களில் சேமிக்கப்பட்டு இருந்த சுமார் 6 லட்சம் டன் உப்பு கனமழை காரணமாகவும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தாலும் அடித்து செல்லப்பட்டு உள்ளது. இதன் காரணமாக உப்பளங்கள் முழுமையாக தண்ணீரிலும் சகதியிலும் சிக்கி உள்ளது.




கடந்த ஆண்டு பொய்த்துப் போன பருவமழையால் உப்பு உற்பத்தி அதிகரித்த காரணமாகவும் உப்பு விலை மிகவும் குறைவாகவே சென்றது. அதே நேரத்தில் இந்த ஆண்டு மழையால் உப்பு உற்பத்தி துவங்க கூடுதலாக ஓரிரு மாதம் ஆகும் என தெரிவிக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் தற்போதைய கையிருப்பில் சுமார் 4 லட்சம் டன் அளவிலேயே உப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் உப்பு பாத்திகள் சரி செய்ய வேண்டியது உப்பளங்களுக்கு செல்ல வேண்டிய சாலைகளை சரி செய்ய வேண்டியது மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டியது என கடுமையான செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் . பொதுவாக மழை நின்றவுடன் உப்பளப்பாத்திகளில் இருக்கும் ஜிப்ஸ்ம் அகற்றப்பட்டு சிமெண்ட் ஆலைகள் பிளாஸ்டா பாரிஸ் ஆலைகள் உள்ளிட்டவைகளுக்கு அனுப்பப்படும் ஜிப்சம் டன் ஒன்றுக்கு ரூ 600 முதல் ரூ 1200 வரை விற்பனையாகும் ஆனால் தற்போது பெய்த மழையின் காரணமாக ஜிப்சம் எடுக்க இயலாத சூழல் உள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .




அதே நேரத்தில் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ 6000 வழங்கப்பட்டு வந்தாலும் கூட தற்போது பெய்த கனமழை காரணமாக தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது பெய்த அதி கனமழையால் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ள உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு சுமார் பத்து லட்சம் டன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.