தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும், காட்டடாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. அதன்படி கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பெருவெள்ளம் தூத்துக்குடி மாநகரை மூழ்கடித்தது. இதனால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களும் கடும் இழப்பை சந்தித்து உள்ளன.




தூத்துக்குடியில் 15 சரக்கு பெட்டக ஏற்றுமதி மையங்களும், ஒரு ஐ.சி.டி முனையமும் அமைந்து உள்ளது. தூத்துக்குடி நகருக்குள் புகுந்த மழை வெள்ளம் சரக்கு பெட்டக மையங்களையும் சூழ்ந்தது. இதனால் பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. சுமார் ரூ.100 கோடி வரை பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போன்று இறக்குமதி செய்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான மரத்தடிகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இன்சூரன்சு அதிகாரிகள் சேதம் அடைந்த கண்டெய்னர்கள் மற்றும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சரக்கு பெட்டக மையம் சங்க தலைவர் செலஸ்டின் வில்லவராயர் கூறும் போது,"தூத்துக்குடி துறைமுக நகரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சரக்கு பெட்டக மையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கப்பலுக்கு கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் தூத்துக்குடி நகருக்குள் புகுந்த மழை வெள்ளம் சில சரக்கு பெட்டக மையங்களுக்குள் புகுந்து, விரைவாக மையத்தை கடந்து சென்றது. சில சரக்கு பெட்டக மையங்களில் சுமார் 4 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.




ஏற்றுமதி, இறக்குமதி தொழில் கடும் இழப்பை சந்தித்து உள்ளது. இதில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டு இருந்த ஜவுளிகள், மசாலா பொருட்கள், உணவு பொருட்கள், இயந்திரங்கள், உதிரிபாகங்கள், இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த முந்திரி, பருத்தி, மரத்தடிகள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்து உள்ளன. சுமார் 750 சரக்கு பெட்டகங்கள் வரை சேதம் அடைந்து இருக்கின்றன. இந்த கண்டெய்னர்களில் இருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இது தொர்பாக இன்சூரன்சு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற மழை வெள்ளம் ஊருக்குள் சென்று சேதம் விளைவிப்பதை தடுக்க அரசு உரிய திட்டங்களை தீட்டி தொழில்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.




இந்நிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க குழுவினர் தூத்துக்குடி துறைமுக பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பின்னலாடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. முழுமையாக பாதிப்பை ஆராய்ந்த பிறகு பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து கணக்கிட முடியும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சரக்கு முனையத்தில் சரக்குகளை வைத்துள்ள நிறுவனங்கள் சுங்க தீர்வை முகமது பரிந்துரை கடிதத்தை கொடுத்து சரக்குகளின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது