தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த அதிக கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது பெரும்பாலான பகுதிகள் கடும் சேதம் அடைந்தன. குறிப்பாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்,ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்தினார். அதேபோன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.


மேலும் தூத்துக்குடி நெல்லை தென்காசி குமரி மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் பாதிப்பு காரணமாக பிரதமர் மோடியை சந்தித்து தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காகவும், சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தனர்.




இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி, ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பல்வேறு துறை அதிகாரிகள் தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்கள் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தேவையான நிவாரணம் வழங்குவது குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் வழங்கினார்.




இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர், சேதமடைந்த கோரம்பள்ளம் குளம், அந்தோனியார்புரம் பாலம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். கோரம்பள்ளம் குளம் பகுதியை மத்திய நிதி அமைச்சர் ஆய்வு செய்தபோது உடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என அதிகாரிகளிடம் கேட்டார் அவர்களை முழுமையாக விளக்குமாறு கேட்டுக் கொண்டார்.




அதே நேரத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சேதம் குறித்து கேட்டார். அப்போது அவர்கள் கூறுகையில், கோரம்பள்ளம் குளம் 6 கிலோமீட்டர் நீளம் 3 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இந்த குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படவில்லை. அதே போன்று மழை வெள்ளம் அதிகப்படியாக வரும்போது கோரம்பலம் கண்மாயில் உள்ள 24 கண் மதகுகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த வெள்ளத்தின் போது அதிகாரிகள் மதகுகளை சரிவர திறக்காமல் காலம் தாழ்த்தினர், இதனால் தான் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது, அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என மத்திய நிதியமைச்சரிடம் புகார் அளித்தனர்.




இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் சேதம் அடைந்த குடிநீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோவில், அரசு மருத்துவமனை, பொன்னன் குறிச்சியில் சேதமடைந்த வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் சேதம் அடைந்த பயிர்களின் விவரங்கள், மின்கம்பங்கள் சேதங்கள், ஏரலில் சேதம் அடைந்த பாலம் வணிக நிறுவனங்கள் மற்றும் வாழவல்லான் பகுதியில் சேதம் அடைந்த மின் கோபுரம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே பிரபாகர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் அபூர்வா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.