தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ரூபாய் 24 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பிடிபட்டது குறித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.




தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையாளர் மதுபாலன் , துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,




கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களின் வசதிக்கான பூங்காக்களை மேம்படுத்தி வருகிறோம். மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்காக்களில் படிப்பகங்களை உருவாக்கி வருகிறோம்.மாநகராட்சி பகுதியில் உள்ள 10 கிளை நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் கூடும் இடங்களில் கிளை நூலகங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.


தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்தி வருகிறோம். தூத்துக்குடியில் பதிவு பெற்ற 7000 நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அவர்களுக்கு தகுந்த இடங்களை ஆய்வு செய்து ஒதுக்கியுள்ளோம். தூத்துக்குடி நகரை பசுமையாக குடியிருப்பு பகுதியில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். விரைவில் அந்த பணிகள் தொடங்கும் என்றார்.




தொடர்ந்து மாநகராட்சியில்  செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் நிதி திட்டத்தின் ஈடுபாடு சார்ந்த நிர்வாக பணிகளுக்காக புதிய நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி பகுதிகளில் வரைபடங்களுக்கு மாறாக  கட்டப்பட்டு வரும் அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட 5 நகர அமைப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்காலத்தை நீடித்தல், மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளை சிறப்பாக பராமரித்தல்,மாநகராட்சி வணிகவளாகங்கள் வருவாயை பெருக நடவடிக்கை மேற்கொள்ளுதல், தருவை ரோடு திரேஸ்புரம் கணேஷ் நகர் மற்றும் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தல், மாநகரம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.




முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் 51 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி கருப்பு சட்டை, பேன்ட் அணிந்து மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ரூபாய் 24 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை உதவியுடன் மாநகரப் பகுதியில் போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி வெளி நடப்பில் ஈடுபட்டார். 6 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் மட்டுமே வெளிநடப்பு அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.




பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றார். தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை செய்து தரவில்லை என குற்றம் சாட்டிய அவர் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட நிலையில் கள்ளச்சாராய உயிரிழப்பில் 65 பேர் உயிரிழந்துள்ளனர் இதுகுறித்து செய்தியாளர்களை கூட சந்திக்க முடியாதவராக இருக்கிறார். சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி சம்பவங்களை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். அவரை பேசவிடாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், இதனை கண்டித்தும், இன்று தான் வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.