தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுருளிமலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது, குளங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் மண்வள பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும். கோரம்பள்ளம் குளத்தில் வண்டல் மண் அதிக அளவில் நிரம்பி உள்ளன. இதனால் குளத்தில் அதிக நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. குளங்களில் ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே வண்டல் மண் அள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அது போதுமானதாக இருக்காது. கடந்த ஆண்டு மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளோம். தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது. ஆகையால் குளங்களில் உடைப்புகளை விரைந்து சீரமைத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த 2023 ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதிக்கு முன்பு பயிர் காப்பீடு செய்தவர்களில் சிலருக்கு பயிர் ஆய்வுகள் எதுவும் நடத்தாமல் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை விடுவிக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமிபதி பேசும் போது, தமிழக அரசு முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்கான மண்வள அட்டை பெற வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு வண்டல்மண், கரம்பை மண் பெறும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் விவசாய பயன்பாட்டுக்காக கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விணணப்பித்த நாளின் முன்னுரிமை அடிப்படையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். நில சர்வே எண், நில பரப்பு, நில வகைப்பாடு ஆகியவை தாசில்தாரால் ஆய்வு செய்யப்பட்டு 10 நாட்களுக்குள் அந்தந்த தாசில்தார் மூலமாக வண்டல் மண் எடுக்க அனுமதி உத்தரவுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணங்கள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். தாசில்தார் அனுமதி வழங்கிய உடன் அனுமதிக்கப்பட்ட வண்டல் மண்ணை குளத்தின் பொறுப்பு அலுவலர் ஒப்புதலுடன் விவசாயிகள் எடுத்தக் கொள்ளலாம். வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி காலம் 20 நாட்களில் இருந்து 30 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மண் எடுக்க அனுமதிக்கப்பம். அதிகாரிகளால் குறியீடு செய்யப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பட்ட ஆழத்தில் மட்டுமே அனுமதி பெற்றவர்கள் மண் எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுத்தபின்பு நடைச்சீட்டை பெற்று வண்டல் மண் எடுத்து செல்லும் வாகனத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு 644 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கூடுதலாக நீர்நிலைகளை சேர்த்து அரசிதழிலில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 2023 மாதம் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக 9 ஆயிரத்து 988 விவசாயிகளுக்கு ரூ.14.55 கோடி இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பயிர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட நிவாரணம் கழித்து வழங்கப்படும்.
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த முறைகேட்டில் ரூ.13 கோடி வைப்புத்தொகை மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதில் ரூ.9 கோடி அரசிடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை, அல்லது 1-ந் தேதி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதே போன்று 261 பொட்டலங்களில் இருந்த ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருந்தன. இதில் 113 நகைகள் மற்ற வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.