தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களான 4 குழந்தைகளுக்கு குடல் அடைப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.




 பச்சிளம் குழந்தைக்கு குடல் அடைப்பு


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் பல குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளுக்கு முழுமையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு காரணமாக குடல் அடைப்பு இருந்தது. ஒருவேளை இதை சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை இறந்து போக நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனை பரிசோதனை மூலம் கண்டறிந்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.


அறுவை சிகிச்சை


அதன்படி, பிறந்து 3 நாட்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஆகையால் அறுவை சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் எஸ்.வெங்கட சரவணன், உதவி பேராசிரியர் டி.முத்துக்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன்படி 4 குழந்தைகளுக்கும் குடல் அடைப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த 4 குழந்தைகளும் தற்போது முழு ஆரோக்கியமாக உள்ளனர். இந்த தகவலை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.