சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தொகுதி வாக்காளருக்கு வழங்க, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்து, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து புலன் விசாரணை அமைப்பு மேல் முறையீடு செய்யாததால், தொகுதி வாக்காளர் என்ற முறையில் மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, சாட்சியங்கள், தீர்ப்பு உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்டவராகவோ, பாதிக்கப்பட்டவராகவோ இல்லை எனக் கூறி, அமைச்சருக்கு எதிரான வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி சண்முகசுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தொகுதி வாக்காளர் என்ற முறையில் மக்கள் பிரதிநிதி மீதான வழக்கின் தீர்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ள மனுதாரருக்கு உரிமை உள்ளது. விசாரணை அமைப்புகள் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தால், வாக்காளர் என்ற முறையில் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம். அதற்காக தீர்ப்பு உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது. வழக்கு ஆவணங்கள் கோரி மனுதாரர் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய கட்டணங்களை செலுத்தக் கூறி, ஆவணங்களின் நகல்களை 15 நாட்களில் வழங்க வேண்டும் என, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.