தூத்துக்குடி-பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே மழையால் சேதம் அடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




                                                                      தேசிய நெடுஞ்சாலை


கன்னியாகுமரி - காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்தச் சாலையில் வல்லநாடுபகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 




இதே போன்று ஆங்காங்கே ஓடைகள், கால்வாய்கள் மீது பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளம் நீர் வரத்துக் கால்வாய் குறுக்கே பாலம் அமைந்து தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக இந்த சாலை அமைந்து உள்ளது.




                                                                 மழையால் சேதமடைந்த பாலம்


கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சேதம் அடைந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகையால் பாலத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




                                                                                      3-வது டெண்டர்


அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இந்த பாலத்தை சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே 2 டெண்டர் கோரப்பட்டு யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதனால் 3-வது டெண்டர் கோரப்படுகிறது. அதிலும் யாரும் எடுக்காதபட்சத்தில் மதுரை மண்டல அலுவலர் நேரடியாக பணியை மேற்கொள்ள முடியும். இதனால் விரைவில் பாலம் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.




                                                                               வாகன ஓட்டிகள் அவதி


இதுகுறித்து கனரக வாகன ஓட்டுநர்களிடம் கேட்டபோது, தூத்துக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன் கூறும் போது, போன வருசம் பெய்த மழையால் இந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு பாலத்தை சீரமைக்காமல் தற்காலிக சாலை வழியா தான் போயிட்டு வாரோம். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் சுங்கச்சாவடியில் கட்டணம்  வசூலிப்பதை மட்டும் நிறுத்தவே இல்ல. ஏற்கனவே வல்லநாடு பாலத்தில் அப்பப்போ ஏற்படும் பாதிப்பின் காரணமாக வாகனத்தை ஓட்டுவதில் சிரமம். இப்போ இது வேற... நெடுஞ்சாலைத்துறை கொஞ்சம் கண் திறந்து பார்க்கனும் என்கின்றனர்.