தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேன் மூலம் தூத்துக்குடி காமராஜ் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தார்.




அவருடன் வேட்பாளர் கனிமொழி எம்பி, சமூகநலன் மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் வந்தனர். காய்கறி மார்க்கெட் உள்ளே நுழைந்த போது ஒரு மூதாட்டி திடீரென தான் வைத்து இருந்த ரூ.1500 பணம் தொலைந்துவிட்டதாக முதல்வரிடம் முறையிட்டார். அவரை தேற்றிய முதல்வர் உங்கள் பணம் கிடைக்கும் என உறுதியளித்தார். அங்கிருந்து முதல்வர் சென்றதும் திமுக நிர்வாகி ஒருவர் அந்த முதாட்டிக்கு ரூ.2000 பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.




வாக்கு சேகரிப்பு:


தொடர்ந்து முதல்வர் ஒவ்வொரு காய்கறி வியாபாரிகளையும் சந்தித்து பேசினார். காய்கறி எங்கிருந்து வருகிறது, எத்தனை மணிக்கு கடைகள் திறப்பீர்கள், எவ்வளவு நேரம் வியாபாரம் பார்ப்பீர்கள், லாபம் கிடைக்கிறதா என்று விசாரித்தார். ஒவ்வொரு கடையாக சென்ற முதல்வருடன் வியாபாரிகளுடன் கைகுலுக்கி கொண்டனர். பலர் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது, திமுக வேட்பாளர் கனிமொழியை சுட்டிக் காட்டி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது வியாபாரிகள் உங்களுக்கே எங்கள் ஆதரவு என்று தெரிவித்தனர்.




தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்பி கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக அலுவலகம் முன்புள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற கனிமொழி தனது வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.




சொத்து மதிப்பு:


திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பங்குகள், பத்திரங்கள், நகைகள், கார்கள் என மொத்தம் ரூ.38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள் என ரூ.18 கோடியே 54 லட்சத்து 42,000 மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தமாக ரூ.57 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்து 177 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் தனது கணவர் கோ.அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தமாக ரூ.2கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாக கனிமொழி தனது பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தன் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும் சிறப்பு நீதிமன்றம் தன்னை விடுதலை செய்துள்ளதாகவும், இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இதில் சிபிஐ மனுவுக்கு உயர்நீதிமன்றம் 22.03.2024-ல் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என கனிமொழி தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.