திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.




முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய தைப்பூசம், மாசித் திருவிழா, பங்குனி உத்திரம், ஆவனித் திருவிழா, கந்த சஷ்டி போன்ற முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது வைகாசி விசாக திருவிழா. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.




இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கோயில் நடை அதிகாலை 1-00 மணிக்கு திறக்கப்பட்டு, 1-30 க்கு விஸ்வரூப தீபாரதனையும், 4-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் பிறந்த நட்சத்திரமான வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது.




இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக திருநெல்வேலி, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் அரோகரா கோசம் முழங்க பாதயாத்திரையாக வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.





வைகாசி விசாகத்திற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கோயிலில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதால் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று வைகாசி விசாக திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 



 

இளவேனிற் காலத்தின் பிற்பகுதி என்பதால் வைகாசி மாதம் வசந்த காலமாக இந்தியாவில் உள்ளது. எனவே இந்த வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன. விசாக நட்சத்திர ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும்.

 



 

இந்த வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.