தூத்துக்குடி மாவட்டத்தில் பருவநிலை சாதகமற்ற நிலையில் உள்ளதால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதுவரை வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்று உள்ளது.




இந்தியாவின் உப்புத்தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின் ஜனவரி மாதம் ஒப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலமாகும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கியது உப்பு உற்பத்தி சீசன் நிறைவடையும்.




கடந்த ஆண்டு டிசம்பர் 17 18 ஆம் தேதிகளில் பெய்த அதிக கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் உருகுலைந்தது.வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கும் நிலையில் இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உற்பத்திக்கு தயார்படுத்தவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் மே மாத துவக்கத்தில் தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. அதுவும் தரமான உப்பு உற்பத்தியாக இல்லை. இதுவரை பருவநிலை சாதகமாக அமையாததால் உப்பு உற்பத்தி தொடர்ந்து மந்த நிலையில் உள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி ஆகிவிடும் ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5% அளவுக்கு தான் உப்பு உற்பத்தி ஆகி உள்ளது என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.




இது குறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கன மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி துவங்கவே மூன்று மாதங்கள் கூடுதலாக ஆகிவிட்டது  தற்போது நிலவும் பருவநிலையும் உப்பு உற்பத்திக்கு கைகொடுக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்திக்கான மேல் திசை காற்றும் சரியாக வீசாத காரணத்தினால் இதுவரை 5% அளவுக்கு தான் உற்பத்தி நடைபெற்று உள்ளது.


பருவநிலை கை கொடுத்தால் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் எப்படி பார்த்தாலும் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை உப்பு உற்பத்தி 8 முதல் 10 லட்சம் டன் தான் இருக்கும் என்கிறார்கள். உப்பு உற்பத்திக்கான செலவும் வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகமாக ஆகிவிட்டதாக கூறும் உப்பு உற்பத்தியாளர்கள் வழக்கமாக உப்பு உற்பத்திக்கான செலவு 5 லட்சமாகும்,ஆனால் இந்த ஆண்டு 8 லட்சம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் மூன்று மாதங்கள் உற்பத்தி நன்றாக இருந்தால் செலவு செய்த தொகையாவது கிடைக்கும் எனக் கூறும் இவர்கள் இல்லை என்றால் நஷ்டம் தான் ஏற்படும் என்கின்றனர். தற்போது எந்த உப்பு உற்பத்தியாளர்களிடமும் உப்பு கையிருப்பு இல்லை, உற்பத்தியாகும் உப்பை அப்படியே விற்பனை செய்து வருகின்றனர் இதனால் ஓரளவு விளையும் நன்றாக உள்ளது. ஒரு டன் உப்பு தரத்தை பொறுத்து ரூ 2500 முதல் ரூ 4500 வரை உழைப்பு இருக்கிறது என்கின்றனர்.