தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாலையில் பயணம் மேற்கொள்பவர்கள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளை சுற்றி மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டு விடுகின்றன. தன் கால் போன போக்கிலே போகும் மாடுகள் சாலைகளில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு சாலைகளின் நடுவே மற்றும் சாலையின் ஓரத்தில் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனை மாட்டு உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் காலையில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் மாலையானால் கூட உரிமையாளர்கள் கட்டிப்போடு கூட்டி செல்வதில்லை என்று புகார் கூறப்படுகிறது.




தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் காலை நேரங்களில் ஏராளமானோர் ஜாக்கிங், வாக்கிங் மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையோர சாலைகளில் அதிகமான மாடுகள் நடமாட்டம் இருப்பதால் வாக்கிங் செல்ல முடிவதில்லை என கூறும் மக்கள், இருச்சக்கர வாகனமும் இந்த சாலையில் ஓட்டமுடிவதில்லை என்கின்றனர். பழைய விருந்தினர் மாளிகைக்கு எதிரே குப்பைகளை கொட்டுவதால் கால்நடைகள் அங்கு மேயும் சூழல் உள்ளது இதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என்கின்றனர். இதே போன்று பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, வ உ சி சாலை, திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் மாடுகள் சர்வசாதாரணமாக சுற்றித் திரிந்தும், சாலையின் நடுவே படுத்துக் கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இருள் சூழந்த பகுதியில் மாடுகள் நிற்க்கினறனர். இதை கவனிக்க வராமல் வரும் வாகன ஓட்டிகள், மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் சுற்றி திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு இருந்த செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்படி அறிவிப்புகளுக்கு மாறாக கடந்த 5 மாதங்களில் மாநகர பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த 40 மாடுகள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கால்நடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.




ஆனாலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த இயலாத நிலை உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள், கால்நடைகள் சுற்றி திரிவதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாதது போல் உள்ளனர் என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.