தவெக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை முதல்வர் விஜய் கண்டும் காணததுபோல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன் மகனை காவலர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாக பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடக்கம் முதல்வர் அவரின் இறுதி வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம் :
- தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர்கள் நாகராஜ் – பரமேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் தான் அருணாச்சலம் என்ற 26 வயதே ஆன இளைஞர். தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கான பாரில் வேலை செய்து வந்தார்.
- கடந்த 17ஆம் தேதி தென்பாகம் காவல்நிலைய காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அருணாச்சலம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
- அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 180 மில்லி லிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ,அவர் மீது மதுவிலக்கு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இதனையடுத்து அவரை கைது செய்ததும் அவருக்கு முழு உடல் பரிசோதனையை காவல்துறையினர் செய்தனர். அந்த பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைது குறித்தும் அவரின் குடும்பத்திற்கு எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- 17ஆம் தேதி மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர் அருணாச்சலம் பூரண உடலநலத்துடன் இருப்பதாக சான்றிதழித்தப்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஆவணங்களை தயார்படுத்த மீண்டும் அவர் தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
- அந்த நேரத்தில், மற்ற கைதிகளுடன் காவல்நிலையத்தில் இருந்த லாக்-அப்பில் அருணாச்சலம் அடைப்பட்டிருக்கிறார். அப்போது மற்ற கைதிகளுடன் அவர் இயல்பாக நின்றுகொண்டு பேசியிருக்கிறார். அப்படி அவர் சக கைதிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இது காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த பதிவையும் நேற்று காவல்துறை வெளியிட்டுள்ளது.
- அவர் மயங்கி விழுந்ததும் லாக்கப்பை திறந்து அருணாச்சலத்தை வெளியில் கொண்டுவந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை காவல்துறையினர் செய்திருக்கின்றனர். அந்த நேரத்தில் காவல்நிலையம் வெளியே இருந்த அவரது தாயாரும் உள்ளே வந்திருக்கிறார். அப்போது அவர் மயக்கம் தெளிந்து இயல்பாக இருந்திருக்கிறார். இருப்பினும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக சொந்த ஜாமினில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு விடுவித்து அவரது தாயாருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
- அதன்பின்னர் மருத்துவமனைக்கு அருணாச்சலம் அழைத்துச் செல்லும்போதே மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (23 – 07 – 2026) அவர் உயிரிழந்துள்ளார்.
- இது தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அருணாச்சலம் தரப்பு குற்றச்சாட்டுகள் என்ன ?
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலத்தை அவர்கள் நண்பர்கள் பார்கச் சென்று, என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, பைபாஸ் சாலையில் உள்ள தான் வேலைபார்க்கும் டாஸ்மாக் பாருக்கு அருகே வைத்து தன்னை காவல்துறையினர் மூன்று மணி நேரம் கடுமையாக அடித்து தாக்கியதாக அவர் தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- அப்படி போலீஸ் தாக்கியதில் அருணாச்சலத்தின் தலையில் கடுமையான காயம் பட்டதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கவே அவருக்கு உடனடியாக மொட்டை அடிக்கப்பட்டதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
- இதனையடுத்து, அருணாச்சலம் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அருணாச்சலத்தின் உடல் கூராய்வு செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
