தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் பார்களை ஐஸ் பார்கள் தயாரிக்கும் உரிமையாளர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில், மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகமாவதால் ஐஸ் பார் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வழங்க வேண்டுமென ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை விசைப்படகு உரிமையாளர்கள் ஏற்காததை தொடர்ந்து, விசைப்படகுகளுக்கு ஐஸ் பார்கள் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 265 படகுகளும் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத்ததால் சுமார் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்களிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு ஐஸ் பார் ஒன்றுக்கு ரூ.140 கொடுத்து வந்தோம். தற்போது கூடுதலாக ஐஸ் பார் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகரித்து ரூ.150 ஆக விலை நிர்ணயம் செய்துள்ளனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை விசைப்படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு தினமும் 30 முதல் 35 ஐஸ் பார் வரை வாங்குகின்றனர். ஒரு படகுக்கு குறைந்தபட்சம் ரூ 4,000 முதல் 4,500 வரை ஐஸ் பார் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்திலிருந்து தினமும் சராசரியாக 200 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 7000 ஐஸ் பார்கள் விசைப்படகுகளுக்கு வாங்கப்படுகிறது. இது எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என கூறும் இவர்கள் அதனால் இன்று கடலுக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி ஐஸ் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ள மின் கட்டணம் காரணமாக ஒரு ஐஸ் பாருக்கு ரூ 10 விலை அதிகரித்துள்ளோம். இது எங்களுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ள காரணத்தினால் வேறு வழியில்லாமல் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறும் இவர்கள், ஐஸ் பிளான்டில் இருந்து ஐஸ் பார்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் மூலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கு ஐஸ் பார்களை இறக்கி அதை விசைப்படகுகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து செலவு, ஐஸ் பார் ஏற்றி இறக்கும் கூலி உள்ளிட்டவைகளால் செலவு அதிகரிப்பதாக அதனால் வேறு வழி இல்லாமல் விலையை உயர்த்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.