தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரணப் பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் முடிவடைந்து, நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.




இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். 2-வது நாளாக தூத்துக்குடி அருகே உள்ள காலாங்கரை கிராமம், கோரம்பள்ளம் கண்மாய் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.




பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "மழை, வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கோரம்பள்ளம் குளம் போன்று தாமிரபரணி ஆறு மற்றும் குளங்களில் 750 உடைப்புகள் ஏற்பட்டு உள்ளன. இவை எல்லாவற்றையும் சரிசெய்வதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து மறுசீரமைப்பு பணிகளையும் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டு வருகிறோம். தற்போது வரை 50 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவடைந்து உள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முழுமையாக சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தால்தான் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது அதன்மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடியும். அதன் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும். கனமழையினால் ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களையும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மூலம் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.




மேலும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களையும் கணக்கெடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ள சிறப்பு பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் 3 நாட்களுக்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை 200 மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தெருக்களில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், மரங்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. நேற்றைய கணக்கெடுப்பின்படி சுமார் 3 ஆயிரத்து 500 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தெரிய வருகிறது.




மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை வசதி, பால் மின் விநியோகம் உள்ளிட்டவை பெரும்பாலான இடங்களில் செய்து தரப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள சுமார் 175 உடைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் 150 உடைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. மீதமிருக்கும் உடைப்புகளும் சரிசெய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கனமழையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சேதங்களை சரிசெய்யும் மறுசீரமைப்பு பணிகளில் அரசு பணியாளர்கள் ஓய்வின்றி இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணி செய்து வருகிறார்கள்" என்றார்.