தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் மிக முக்கிய நகரமாக பார்க்கப்படுவது தூத்துக்குடி. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று கருதப்படும் தூத்துக்குடி, தொழில் வளர்ச்சியில் அதிவேக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது. தூத்துக்குடி என்று சொன்னதும் நம் ஞாபகத்தில் வரும் விஷயங்களுள் முதலில் மனதில் தோணுவது மக்ரூன்தான்.




தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்னும் இனிப்பு வகையாகும். மக்ரூன் என்றால் போர்த்துகீசிய மொழியில் முட்டையும், முந்திரியும் கலந்த இனிப்பு என்று பொருள். வணிகத்திற்காகவும், மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்கரைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் தங்கள் நிர்வாகத்திற்கேற்ற இடமாக தூத்துக்குடியை தேர்வு செய்து தங்கினர். தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும், கிறிஸ்தவர்களும் பிரேசில் நாட்டில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக்கொண்டு வந்து மக்ரூன் செய்து சாப்பிட்டனர். காலப்போக்கில், வியாபாரிகள் இதனை வணிக ரீதியாக தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினர். மக்களிடையே இதற்கு இருந்த வரவேற்பு காரணமாக அதிக அளவில் தயார் செய்யப்பட்டு தற்போது உலக அளவுக்கு மக்ரூன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவுக்கு மக்ரூனுக்கு கிராக்கி இருப்பதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நஞ்சில்லா உணவே நல் உணவு என்று சொல்லும் சொல்லுக்கேற்ப கடுகளவும் தீங்கு ஏற்படுத்தாத இனிப்பு திண்பண்டமான மக்ரூனுக்கு இன்றளவும் மவுசு குறையவே இல்லை.




மக்ரூன் செய்முறை மிக எளிதானது. 1 கிலோ மக்ரூன் செய்ய அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல் 15 கோழி முட்டைகள் தேவைப்படும். முந்திரியையும், சர்க்கரையையும் நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் கவனமாக பிரித்தெடுத்து நன்றாக கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மையைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். முந்தைய காலத்தில் மக்ரூன் தயார் செய்பவர்கள் இந்த கலக்கலை தம் கைகளினாலே செய்து வந்தனர். தற்போது இதற்கென கிரைண்டர் போன்ற எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். சிறிது நேரத்திலேயே வெள்ளை கரு கலக்கல் வெண் நுரையாக மேலெழுந்து வருகிறது. அந்த சமயம் சர்க்கரையை கொட்டி மீண்டும் கலக்குகிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள்.




தயாரான இனிப்பு பக்குவத்தினை மக்ரூனாக வடிவம் வார்ப்பதுதான் முக்கியம். தொடர்ந்து ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்கொண்டு அதற்குள் பக்குவம் தயாரித்த மாவை அள்ளிவைத்து கீழ்பாகம் வழியாக அதற்குரிய தட்டுகளில் கோலம் போட சுருள் வடிவத்தில் கீழே இனிப்பு பக்குவம் பரவுகிறது. வடிவம் கிடைத்ததும் சூளை அடுப்பின் மேல்தளத்தில் மிதமான சூட்டில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள்.




ஒரு இரவு முழுவதும் காய்ந்தால் சுவையான மக்ரூன் தயாராகிவிடுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 1000 கிலோவுக்கு மேலாக தூத்துக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு மக்ரூன் விற்பனைக்காக வாகனங்களில் அனுப்பி வைக்க படுகிறது.




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒவ்வொரு முறை அவர் தமிழ்நாடு வரும்போதும், அவரது விருந்து நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பது மக்ரூன்ஸ். தூத்துக்குடியில் மக்ரூன்ஸ் மட்டும்தான் ராஜீவ் காந்திக்கு பிடிக்குமாம். அதனால் அவர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் இங்கு இருந்துதான் மக்ரூன்ஸ் வாங்கி சாப்பிடுவார் என்கின்றனர்.