கீழக்கரந்தை முதல் அயன் வடமலாபுரம் கிராம சாலையில் அமைந்துள்ள ஓடையில் புதிய பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழக்கரந்தை ஊராட்சியில் இருந்து அயன்வடமலாபுரம் செல்லும் வண்டிப்பாதையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் சுத்தமான கரிசல் நிலங்களாகும். இந்நிலங்களில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் அனைத்து பயிர்களும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நிலங்களாகும்.


இந்நிலங்களில் விவசாய பனி செய்வதற்கு வண்டிப்பாதை வழியாக சென்று வந்தனர். மழைக்காலத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும்போது ஈர மண்ணில் டிராக்டர்கள் அதில் சிக்கிக் கொள்கிறது. தவிர நடந்து செல்வோரும் ஈர மண்ணில் நடக்க முடியவில்லை. இதனால் குறித்த சமயத்தில் உழவு செய்யவோ, களை பறிக்கவோ, மருந்து தெளிக்கவோ முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு இதுவே வழியாகும்.




கீழக்கரந்தை , அயன்வடமலாபுரம் விவசாயிகள் ஏகோபித்த கருத்துக்கு இணங்க ஐந்து கிலோ மீட்டர் வண்டிப்பாதை கடந்த 2009ம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலை அமைக்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு அப்போது புதியதார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் புதிய தார்ச்சாலை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இச்சாலையில் கீழக்கரந்தையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மேலக்கரந்தை பாசன கண்மாயின் மறுகால் தண்ணீர் செல்லும் பெரிய ஓடை உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் வெளியேறும் போது இவ்வோடை வழியாக விவசாய நிலங்களுக்கு டிராக்டரோ, இரு சக்கர வாகனமோ செல்ல முடியாமல் கிழக்கரந்தை மேலக்கரந்தை தாப்பாத்திகிராமத்தை சுற்றி விவசாய நிலங்களுக்கு வர வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.


இதனை கருத்தில் கொண்டு இவ்வோடையில் புதிய உயர் மட்ட பாலம் கட்டக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த பெரு மழைக்கு சுமார் ஒரு மாத காலம் அவ்வழியாக செல்ல முடியாமல் பல மைல் தொலைவு சுற்றி சென்றனர். இதனையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் இவ்வோடையில் சுமார் மூன்று கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய உயர் மட்ட பாலம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. ஒன்பது மாதங்களாகியும் இப்பனிகள் முடிவடையவில்லை.




இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது,புதுப்பட்டி நாகலாபுரம் சாலையில் பேராய்க்குடி பாசன கண்மாயின் உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. அவ்வோடையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பனி துவக்கப்ட்டு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மீண்டும் ஓடையில் அதிக தண்ணீர் வரும் பட்சத்தில் இவ்வழி மீண்டும் துண்டிக்கப்படும். இதனால் போக்குவரத்து மீண்டும் தடைபட வாய்ப்பு உள்ளது.பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி உடனடியாக முடிக்க வேண்டும் என்கிறார்.